2017-02-03 16:23:00

டிரம்ப் ஆணை, கிறிஸ்தவப் பாரம்பரியத்திற்கு இழுக்கு


பிப்.03,2017. "அன்னியருக்கு அன்பு காட்டுங்கள்; ஏனெனில் எகிப்தில் நீங்களும் அன்னியராய் இருந்தீர்கள்" என்று விவிலியம் கூறும் அறிவுரைக்கு முரணாக, அரசுத் தலைவர் டொனால்டு டிரம்ப் அவர்களின் அண்மைய அரசாணை உள்ளது என்று, அமெரிக்க ஐக்கிய நாட்டில் பணியாற்றும் இயேசு சபையினரின் இரு மாநிலத் தலைவர்கள் இணைந்து ஓர் அறிக்கையை, பிப்ரவரி 1, இப்புதனன்று வெளியிட்டுள்ளனர்.

ஏழு இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குள் நுழைவதற்கு அனுமதி மறுத்து, அரசுத் தலைவர் டிரம்ப் அவர்கள் அண்மையில் வெளியிட்டுள்ள அரசாணையைக் கண்டனம் செய்து, கலிபோர்னியா, மற்றும் ஒரேகான் மாநிலங்களின் இயேசு சபைத் தலைவர்கள் இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

டிரம்ப் அவர்கள் வெளியிட்டுள்ள இவ்வாணையின் விளைவாக, ஆயிரமாயிரம் பெண்களும், குழந்தைகளும் போரின் கொடுமைகளுக்கு மீண்டும் உள்ளாக்கப்படுகின்றனர் என்றும், இவ்வாணை, கிறிஸ்தவ, மற்றும் அமெரிக்க பாரம்பரியத்திற்கு இழைக்கப்பட்டுள்ள அவமானம் என்றும் இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வேற்றுமைகள் வளர்ந்துவரும் இன்றைய உலகில், சுவர்களைக் கட்டுவதற்குப் பதில், பாலங்கள் அமைப்பதில் இயேசு சபையினர் இன்னும் தீவிர முயற்சிகள் மேற்கொள்வர் என்பதை, Scott Santarosa, மற்றும், Michael Weiler என்ற இரு மாநிலத் தலைவர்களும் இவ்வறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.

இதற்கிடையே, Ignatian Solidarity Network (ISN) என்ற இயேசு சபை அமைப்பு, அமெரிக்க ஐக்கிய நாடு, மற்றும் கனடாவில் வாழும் மக்களுடன், இந்த அரசாணையைக் குறித்த ஒரு கலந்துரையாடலை, பிப்ரவரி 2, இவ்வியாழன் மாலை, வலைத்தளம் வழியே மேற்கொண்டது என்று ICN கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது. 

ஆதாரம் : SJWeb / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.