2017-02-03 16:16:00

பதுவை நகர் புனித அந்தோனியார் திருப்பண்டங்கள் ஆசியாவில்


பிப்.,03,2017. இம்மாதம் 2ம் தேதி முதல் மார்ச் மாதம் 15ம் தேதி வரை, பதுவை நகர், புனித அந்தோனியாரின் திருப்பண்டங்கள், பங்களாதேஷ், இந்தியா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழும் விசுவாசிகளின் பார்வைக்காக எடுத்துச் செல்லப்படுகின்றன.

இவ்வாரம் வியாழன் முதல் பங்களாதேசில் தன் பயணத்தை துவக்கியுள்ள இத்திருப்பண்டங்கள், 8ம் தேதி வரை பல்வேறு நகர்களில் பார்வைக்கு வைக்கப்படும். இத்தாலியின் பதுவை நகரிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டுள்ள இத்திருப்பண்டங்களுடன் பதுவை நகரில் வாழும் நான்கு துறவிகளும் உடன் சென்றுள்ளனர்.

பங்களாதேசிலிருந்து இந்தியாவுக்கு எடுத்துச் செல்லப்படும் பதுவை நகர், புனித அந்தோனியாரின் திருப்பண்டங்கள், இம்மாதம் 10ம் தேதி முதல் மார்ச் மாதம் 15ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகர்களுக்கு எடுத்துச் செல்லப்படும்.

புதிதாக கர்தினாலாக நியமிக்கப்பட்ட பங்களாதேசின் டாக்கா பேராயர் கர்தினால் பேட்ரிக் டி ரொசாரியோ அவர்களின் விண்ணப்பத்தின்பேரில், தற்போது பங்களாதேசிற்கு கொண்டு வரப்பட்டுள்ள புனித அந்தோனியாரின் திருப்பண்டங்களை தரிசிக்க, மக்கள் பெருமெண்ணிக்கையில் வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பிப்ரவரி 10ம் தேதி முதல், 19ம் தேதி முடிய, மற்றோரு குழுவினர், இப்புனிதரின் திருப்பண்டங்களை, அமெரிக்க ஐக்கிய நாட்டின் பல்வேறு நகரங்களில் மக்களின் வணக்கத்திற்கென கொண்டு செல்கின்றனர்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.