2017-02-04 16:05:00

புற்றுநோயை தொடக்கத்திலேயே கண்டறிவது உயிர்களைக் காப்பாற்றும்


பிப்.04,2017. புற்றுநோயைத் தொடக்கத்திலேயே கண்டறிவது, மனித உயிர்களைக் காப்பாற்றும் மற்றும், அந்நோய்க்குரிய சிகிச்சை செலவுகளையும்  குறைக்கும் என, ஐ.நா.வின் நலவாழ்வு நிறுவனம் கூறியது.

பிப்ரவரி 04, இச்சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்ட்ட, உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு புதிய வழிகாட்டிகளை வெளியிட்டுள்ள, WHO என்ற உலக நலவாழ்வு நிறுவனம், புற்றுநோயின் பல்வேறு அறிகுறிகளை, பொது மக்களுக்கு வெளியிடுவதன் வழியாக, அவர்கள் விரைவிலே அந்நோய்க்குரிய சிகிச்சையை எடுத்துக்கொள்ள முடியும் என்று கூறியது.

ஒவ்வோர் ஆண்டும், 88 இலட்சம் பேர், புற்றுநோயால் இறக்கின்றனர். இவர்களில், பெரும்பாலானோர், வருவாய் குறைந்த மற்றும், நடுத்தர வருவாய் உள்ள நாடுகளைச் சார்ந்தவர்கள் என்றும், WHO நிறுவனம் கூறியுள்ளது.

2030ம் ஆண்டுக்குள், புற்றுநோய் தொடர்புடைய நோய்களால் இறப்பவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர், வளரும் நாடுகளில் இருப்பார்கள் எனவும், WHO நிறுவனம் கூறியுள்ளது.

உடல் பருமன் போன்ற காரணங்களால் அடுத்த, இருபது ஆண்டுகளில், ஆண்களைவிட பெண்களுக்குப் புற்றுநோய் ஆபத்து, ஆறு மடங்கு அதிகம் உள்ளதாக இங்கிலாந்து புற்றுநோய் ஆய்வு கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல் பருமனைத் தொடர்ந்து, புகைபிடித்தல், பெண் புற்றுநோயாளிகள் அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகின்றது.

இந்தியாவில் மட்டும், ஒவ்வோர் ஆண்டும் பத்து இலட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு, புற்றுநோய் இருப்பது கண்டறியப்படுகிறது. புற்றுநோயைத் தாமதமாகக் கண்டறிவதால் ஒவ்வோர் ஆண்டும், ஏழு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்தியாவில் உயிரிழக்கின்றனர்.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.