2017-02-04 15:39:00

முதலாளித்துவம் பணத்தை கடவுளாக்கினால் அதைப் புறக்கணியுங்கள்


பிப்.04,2017. தனது இலாபத்தையே நோக்கமாகக் கொண்டு செயல்படும் முதலாளித்துவம், சிலைவழிபாடு என்ற கட்டமைப்பாக மாறும் ஆபத்தை எதிர்நோக்குகின்றது, இத்தகைய முதலாளித்துவம், நலிந்த மக்களைப் புறக்கணிக்கின்றது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

பொருளாதாரத்தைப் பொதுவாக வைப்பதற்கு ஆதரவு வழங்கும் விதத்தில், பொருளாதார-சமூக அமைப்பின் விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவருவதற்கு அழைப்பு விடுத்த, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பொருளாதாரத்தைப் பொதுவாக வைப்பதன் வழியாக, ஏழைகள் உட்பட, எல்லாரும் வாழ்வு பெறுவர் மற்றும், அதன் இலாபங்கள், ஒன்றிப்பு உணர்வை உருவாக்கும் என்றும் கூறினார்.

Focolare கத்தோலிக்க பக்த இயக்கத்தோடு தொடர்புடைய, ஒன்றிப்புப் பொருளாதாரம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டதன் 25ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, அந்த அமைப்பின் 1,100 பிரதிநிதிகளை, இச்சனிக்கிழமையன்று, திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, இவ்வாறு கூறினார்.

காஸ்தெல்கந்தோல்போவில் கூட்டம் நடத்திவரும் இவ்வமைப்பினருக்கு உரையாற்றிய திருத்தந்தை, மனிதரைப் புறக்கணித்து, பணத்தைக் கடவுளாக வணங்கும் பொருளாதார அமைப்பில் மாற்றம் தேவை எனக் கூறினார்.

பணத்தைக் கடவுளாக ஆக்குவது குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்திய திருத்தந்தை, உணவு, கல்வி, சிறாரின் எதிர்காலம் என, எதற்குமே வசதியில்லாதபோது பணம் முக்கியமானது, ஆனால், பணத்தின் நோக்கம் மாறும்போது, அது சிலை வழிபாடாகின்றது என்றும் கூறினார்.

49 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட பிரதிநிதிகள், பிப்ரவரி 1, கடந்த புதனன்று, காஸ்தெல்கந்தோல்போவில் தொடங்கிய கூட்டம், பிப்ரவரி 5, இஞ்ஞாயிறன்று நிறைவடைகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.