2017-02-06 15:46:00

ஒவ்வொரு வாழ்வும் புனிதமானது, வாழப்பட வேண்டியது


பிப்.,06,2017. இஞ்ஞாயிறன்று, இத்தாலிய ஆயர் பேரவையால் சிறப்பிக்கப்பட்ட,'வாழ்வுக்கு ஆதரவான நாள்' பற்றி தன் மூவேளை செப உரையின் இறுதியில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வாழ்வு கலாச்சாரத்தை ஊக்குவிப்பதில் ஒவ்வொரு விசுவாசியும் தங்களை ஈடுபடுத்தவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

'ஒவ்வொரு வாழ்வும் புனிதமானது' என்பதை தன் உரையில் மீண்டும் வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எவரையும் தனியாக விட்டுவிடாதவகையில், வாழ்வு கலாச்சாரத்தை ஊக்குவிப்போம் என அழைப்புவிடுத்தார்.

‘வாழ்வு என்பது அழகானது, அதை இரசியுங்கள். வாழ்வு என்பது வாழப்படவேண்டியது, அதற்காக குரல் கொடுங்கள். இது, பிறக்கவிருக்கும் குழந்தைக்கும், இறக்கவிருக்கும் மனிதருக்கும் பொருந்தும், ஏனெனில் எல்லா வாழ்வும் புனிதமானது', என்ற புனித அன்னை தெரசாவின் வார்த்தைகளையும் மேற்கோள் காட்டினார், திருத்தந்தை.

கருவில் வளரும்போதே, அழிவுக்குள்ளாகும் குழந்தைகள், வாழ்வின் இறுதிக்காலத்தை எதிர்நோக்கும் மனிதர்கள் என அனைவருக்காகவும் ஒன்றிணைந்து செபிப்போம், ஏனெனில், எவரும் தனிமையில் விடப்படக்கூடாது என்ற அழைப்பையும் முன்வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.