2017-02-06 16:10:00

சுற்றுச்சூழல் பாதுகாப்பை மதிக்கும் கலாச்சாரம் உருவாக‌


பிப்.,06,2017. இம்மாதம் 11ம் தேதி சிறப்பிக்கப்படவிருக்கும் 25வது, நோயுற்றோர் உலக தின சிறப்பு நிகழ்ச்சிகள் குறித்தும், நலப்பணியாளர்களுக்கான திருப்பீடத்தின் வழிகாட்டுதல்கள் அடங்கிய புதிய ஏடு குறித்தும் இத்திங்களன்று பத்திரிகையாளர் கூட்டத்தில் விளக்கமளித்தார் கர்தினால் பீட்டர் டர்க்சன்.

நல ஆதரவுப் பணியாளர்களுக்கான திருப்பீட அவையையும் இணைத்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள, ஒருங்கிணைந்த மனித முன்னேற்றப் பணிகளுக்கான திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் டர்க்சன் அவர்கள், செய்தியாளர்களிடம் பேசுகையில், இம்மாதம் 10 முதல் 13ம் தேதி வரை பிரான்சின் லூர்து நகரில் இடம்பெறும் கொண்டாட்டங்களில், 11ம் தேதியன்று திருத்தந்தையின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் திருப்பீடச் செயலர், கர்தினால் பியேத்ரோ பரோலின் அவர்களின் சிறப்புத் திருப்பலி இடம்பெறும் என்றார்.

இவ்வாண்டின் உலக நோயுற்றோர் தினத்திற்கென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏற்கனவே வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதுபோல், லூர்து நகரின் கொண்டாட்டங்களில், வாழ்வு, நல ஆதரவு, மற்றும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை மதிக்கும் ஒரு கலாச்சாரத்திற்கான தூண்டுதல் வழங்கப்படும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார், கர்தினால் டர்க்சன்.

நல ஆதரவுப் பணியாளர்களுக்கான திருப்பீட அவையின் முன்னாள் தலைவர், காலம்சென்ற பேராயர் Zygmunt Zimowski அவர்களின் முயற்சியால் உருவாக்கப்பட்ட புதிய வழிமுறைகள் ஏட்டை வெளியிடுவதில் தான் மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார், கர்தினால் டர்க்சன்

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.