2017-02-06 15:07:00

வாரம் ஓர் அலசல் – ஒவ்வொரு வாழ்வும் புனிதமானது


பிப்.06,2017. "ஒவ்வொரு வாழ்வும் புனிதமானது. புறக்கணிப்புக் கலாச்சாரத்திற்கும், குழந்தை பிறப்பு குறைந்து வருவதற்கும் முன்பாக, வாழ்வுக் கலாச்சாரத்தை முன்னெடுத்துச் செல்வோம். நாம் எல்லாரும் அருகருகே வாழ்பவர்கள். கருக்கலைப்பு ஆபத்திலுள்ள குழந்தைகள் மற்றும், வாழ்வின் இறுதி விளிம்பில் இருக்கின்ற வயது முதிர்ந்தவர்களுக்காகச் செபிப்போம். இவ்வுலகில் யாரும் தனித்து விடப்படக் கூடாது. பிறக்கவிருக்கும் குழந்தையின் வாழ்வும், இறந்துகொண்டிருக்கும் மனிதரின் வாழ்வும் என, எல்லா வாழ்வும் புனிதமானது. புனித அன்னை தெரேசாவின் வார்த்தைகளை நினைவுகூருவோம். வாழ்வு அழகானது. எனவே அதனைப் போற்று. அதற்குப் பாதுகாப்பளி".... இத்தாலியில், இஞ்ஞாயிறன்று மனித வாழ்வு ஆதரவு நாள் கடைப்பிடிக்கப்பட்டது. இந்நாளையொட்டி, இஞ்ஞாயிறு நண்பகலில் மூவேளை செப உரைக்குப் பின்னர், இவ்வாறு கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொரு வாழ்வும் புனிதமானது என, மூன்று முறை உரக்கச் சொன்னார். 2016ம் ஆண்டு கோடை கால நிலவரப்படி, இத்தாலியில் மக்கள் தொகை பெருக்கம், 0.23 விழுக்காடு. பிறப்பு விகிதம் ஆயிரத்திற்கு 8.7. அதேநேரம் இறப்பு விகிதம் 10.3. 

ஒவ்வொரு வாழ்வும் புனிதமானது. தமிழகத்தில் அறவழியில் போராடி ஜல்லிக்கட்டு பாரம்பரியத்தைக் காத்த இளையோர், சென்னை வெள்ளத்தில், உயிரைப் பணயம் வைத்து  மக்களைக் காப்பாற்றிய இளையோர், இந்நாள்களில் மற்றுமோர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சனவரி 28ம் தேதி அதிகாலை, சென்னையை அடுத்த எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில், மும்பையிலிருந்து வந்த M T Dawn Kanchipuram என்ற சரக்குக் கப்பலும், எரிவாயு எடுத்துச் சென்ற M T BW Maple என்ற கப்பலும் மோதிக்கொண்டதில், Dawn காஞ்சிபுரம் கப்பலின் நடுப்பகுதி உடைந்தது. அதிலிருந்து. ஏறக்குறைய இருபது டன் அளவுக்கு, கடலில் கச்சா எண்ணெய் கொட்டி இருக்கலாம் என, நிபுணர்கள் சொல்கிறார்கள். பெட்ரோல், டீசல், வெள்ளை பெட்ரோல் உள்ளிட்ட பல எண்ணெய்களின் கலவைதான் கச்சா. கச்சாவில் இருந்துதான் இவை அத்தனையும் பிரித்தெடுக்கப்படுகின்றன. சாலை போட பயன்படுத்தப்படும் தார்கூட கச்சாவிலிருந்தே எடுக்கப்படுகிறது. கச்சா எண்ணெயில், benzene, benton, hexane உள்ளிட்ட நச்சு வாயுக்களும் இருக்கின்றன. இவை அத்தனையும் ஹைட்ரோ கார்பனின் வெவ்வேறு பரிமாணங்கள். இவற்றைச் சுவாசிப்பதாலோ அல்லது தொடுவதாலோ வாந்தி, மயக்கம், குமட்டல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். சில சமயங்களில் மூச்சுவிடுவதுகூட சிக்கலாகும். சிறுநீரகம், கல்லீரல் போன்றவற்றைப் பாதிக்கும். இதன் நச்சுத்தன்மை உடனடியாக உணரக் கூடியது அல்ல எனச் சூழலியலாளர்கள் எச்சரிக்கிறார்கள்.

கடல் நீரில் கலந்த இந்த எண்ணெயை அகற்ற அரசு மெத்தனத்தை கடைப்பிடித்த நிலையில், இதனை அகற்றும் பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வ இளையோர் ஒன்றிணைந்துள்ளனர். இந்த எண்ணெய் படலத்தை சுத்தம் செய்ய இளையோர் எந்த பாதுகாப்பு கவசங்களையும் பயன்படுத்தவில்லை. இவர்கள் வெறும் கையால் இதை சுத்தம் செய்வதால், தோல் வியாதி, புற்றுநோய், மூச்சுக் கோளாறு உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு ஆளாவார்கள் என மருத்துவர்கள் தெரிவித்தனர். மெரினாவில் உள்ள இளையோர் இந்த நோயால் தாக்கப்படும் வாய்ப்புகள அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. போராட்டத்தின்போது தங்களுக்கு ஆதரவு அளித்த மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தங்களுக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை என்று இளையோர் இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளனர். ‘எண்ணெய் கலந்த கடல் நீரைத் தொட்டாலே ஆபத்து’என ஐ.ஐ.டி நிபுணர்கள் எச்சரித்துக் கொண்டிருக்க, இங்கு பலரும் இதைக் கைகளிலும் முகத்திலும் பூசிக்கொண்டு அள்ளுகிறார்களாம். கடலில் கழிவைக் கொட்டுவது பன்னாட்டு நிறுவனம். ஆனால் சுத்தம் செய்வது நம் மாணவர்களா? மரம் ஏறுறது ஒருத்தன், நோகாம நுங்கு திங்கறது இன்னொருத்தனாக்கும்? என்று நெட்டிசன்கள் கேட்கிறார்கள். அன்பர்களே, “நோய்களிலே மிகக் கொடிய நோய் அடுத்தவர்மீது அக்கறையற்று இருப்பதே” என்று புனித அன்னை தெரேசா சொன்னார். தன்னார்வப் பணியாற்றும் இந்த நம் இளையோரின் வாழ்வு மீது அக்கறை காட்ட வேண்டியவர்கள் காட்டுவார்களா?

ஒவ்வொரு வாழ்வும் புனிதமானது. தங்கள் குடும்பம், தங்கள் உயிர் இவற்றைப் பின்னுக்குத் தள்ளி, நாட்டைக் காப்பாற்றும் பணியில் உள்ள நம் வீரர்கள் சடலமாக சொந்த ஊர் திரும்பும் செய்திகளை வாசிக்கும்போது, அந்த வீரர்களுக்கு ஒரு சல்யூட் அடிக்கிறோம். கடந்த இரண்டு வாரமாக, காஷ்மீரில் ஏற்பட்டுவரும் பனிச்சரிவில், இதுவரை, பத்துக்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் உயிர் இழந்துள்ளனர். இவர்களில், தமிழகத்தை சேர்ந்தவர்கள் நான்கு பேர். கடந்த வாரத்தில், மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்துள்ள பள்ளக்காபட்டி கிராமத்தை சேர்ந்த 26 வயது நிரம்பிய இராணுவ வீரர் சுந்தரபாண்டியன் அவர்களின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவரைப் பற்றி எழுதிய ஊடகம் ஒன்று, “இவர் போல, யார் இருப்பார் என ஊரே சொல்கிறது” என எழுதியிருந்தது. சுந்தரபாண்டியனின் நாட்டுப்பற்றும், இராணுவ பக்தியும்தான் இதற்குக் காரணம். நிறைமாத கர்ப்பிணியான மனைவி சுகப்பிரியாவிடம் உன்னை பார்க்கத்தான் வந்துகொண்டு இருக்கிறேன், இன்னும் நான்கு நாட்களுக்குள் உன்னிடம் வந்துவிடுவேன் என்று பாசத்துடன் பேசிவிட்டு இராணுவ முகாமைவிட்டு கிளம்புவதற்கு ஒரு சில மணி நேரத்திற்கு முன்பு இராணுவ முகாம் மீது விழுந்த பனிச்சரிவில் இவர் சிக்கி உயிரிழந்தார்.

இராணுவத்தைப் பற்றி சரிவர அறிந்திராத விவசாய கிராமமான பள்ளக்காபட்டியில் இருந்து முதன் முதலில் இராணுவத்தில் சேர்ந்தவர் சுந்தரபாண்டியன். கடந்த 2010ல் சேர்ந்த இவர், தனது கிராமத்து இளைஞர்கள் பலரையும் இராணுவ வீரர்களாக்க ஊக்குவித்துள்ளார். ஒவ்வொரு முறை விடுமுறைக்கு வரும்போதும், இராணுவத்தில் சேர்வதற்கான பயிற்சி கையேடுகளை இளைஞர்களுக்கு கொடுத்து படிக்கும்படி கூறியுள்ளார். மேலும், ஓட்டப்பந்தயம், மலையேற்றம், Pullups உள்ளிட்ட பயிற்சிகளை, தானே முன்னின்று சொல்லி கொடுத்துள்ளார். தனது கிராமத்தில் சிறிய விளையாட்டு மைதானம், உடற்பயிற்சி திடல் அமைத்து, விடுமுறையில் ஊருக்கு திரும்பும்போது ஓடும் பயிற்சி, கயிறு ஏறும் பயிற்சி உள்ளிட்ட உடல் வலுவூட்டும் பயிற்சிகளை வழங்கி உள்ளார். இதன் காரணமாக பள்ளக்காபட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த நாற்பது இளைஞர்கள் தற்போது இராணுவத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவ்வாறு தனது கிராமத்தையும், சுற்றியுள்ள கிராமங்களையும் இராணுவ கிராமமாகவே சுந்தரபாண்டியன் மாற்றி நாட்டிற்கும் பிறந்த கிராமத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். “பிறர் நலனுக்காக வாழாத வாழ்வு வாழ்வல்ல; உன் உதவியால் உலகை நீ குணமாக்குகின்றாய்”என்ற புனித அன்னை தெரேசாவின் கூற்றுக்களுக்கு எடுத்துக்காட்டாய் விளங்குபவர், இராணுவ வீரர் சுந்தரபாண்டியன். உனக்காக வாழ்கிறேன் என்று பிறர் சொல்வதைவிட, உன்னால் வாழ்கிறேன் என்று, பல இளையோரைச் சொல்ல வைத்துள்ளார் சுந்தரபாண்டியன்.

ஒரு சமுதாயம் வாழ்வை மதிக்கத் தொடங்கும்போது, அது பிறரின் உரிமைகளை மதிக்கத் தொடங்கும். வன்முறைக்குத் தடுப்பூசி போடுவது என்பது, உனது கோபத்தை மனிதர்மீது செலுத்துவது அல்ல, ஒரு பொம்மையின்மீது செலுத்துவதாகும்.  நாம் அனைவருமே ஆசிரியர்கள். நாம் நல்ல குடிமகன்களாக, வாழ்வைப் புனிதமாக மதித்து வாழ்வதற்கு, நாம் ஒருவருக்கொருவர் கற்றுக்கொடுக்க முடியும் (Antanas Mockus). வன்முறையின்றி நம் வாழ்வை மாற்றுவோமா? ஏனெனில் மனித வாழ்வு புனிதமானது என, வாழ்வு புனிதமானது என்ற ஒரு திரைப்படத்தில் கூறப்பட்டது. கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட, சிறுகடம்பூரைச் சேர்ந்த 16 வயது நிரம்பிய தலித் சிறுமி நந்தினிக்காக பலர் நீதிக் குரல் எழுப்பியுள்ளார்கள். நம் சமுதாயங்களில் அப்பாவிகளின் வாழ்வு, பல நிலைகளில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகுகின்றது. தற்போதைய தமிழகத்தின் நிலைமை, சமூக நலனில் அக்கறையுள்ள அனைவரையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. “தமிழகம் இருளில் மூழ்கியுள்ளது. இளையோரே அதை வெளிச்சத்திற்குக் கொண்டு வாருங்கள், காளைகளைக் காக்க அறவழியைக் கையிலெடுத்த நம் தமிழ் இளம் காளையர், நாட்டைக் காப்பதற்கு முன்வாருங்கள்” என நெட்டிசன்கள் கேட்கின்றனர். அன்பர்களே, ஒவ்வொரு வாழ்வும் புனிதமானது என உணர்ந்து செயல்படுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.