2017-02-07 15:40:00

கத்தோலிக்கப் காரித்தாஸ், அனைவருக்கும் பணியாற்றுகின்றது


பிப்.07,2017. கத்தோலிக்கப் பிறரன்பு நிறுவனமான காரித்தாஸ், மற்ற அரசு-சாரா நிறுவனங்களிலிருந்து வேறுபட்டு, மக்கள் மத்தியில் கடவுளின் இருப்பாக இருந்து, அனைத்து மனிதருக்கும் பணியாற்றுகின்றது என, உலக காரித்தாஸ் நிறுவனத் தலைவர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் கூறினார்.

பெய்ரூட் நகரில், லெபனான் காரித்தாஸ் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் உரையாற்றிய கர்தினால் தாக்லே அவர்கள், உள்ளூர் காரித்தாஸ் நிறுவனங்கள், மற்ற அரசு-சாரா நிறுவனங்கள் போன்று செயல்படாமல் இருப்பதில் விழிப்பாய் இருக்க வேண்டுமென்றும் கூறினார்.

இக்காலத்தில் புலம்பெயர்ந்தோரும், குடியேற்றதாரரும், பெருமளவில் செல்வந்த நாடுகளுக்குச் செல்வது குறித்தும் பேசிய, கர்தினால் தாக்லே அவர்கள், உலகை ஒரே குடும்பமாக அமைக்கும் நோக்கத்தில், 1980களில் உலகத் தாராளமயமாக்கல் தொடங்கியது, ஆனால், கடந்த சில ஆண்டுகளில் எத்தகைய தாராளமயமாக்கல் இடம்பெற்றுள்ளது என்ற கேள்வியையும் எழுப்பினார்.

மிக ஆழமான நன்னெறி சார்ந்த நெருக்கடியின் அடையாளத்தையும் காண முடிகின்றது என்றும், உலகத் தாராளமயமாக்கலால், வெகு சிலரே பயனடைகின்றனர் என்றும், மனச்சோர்வு உணர்வுகளின் மீது, முதலாளித்துவத்தை எவ்வாறு திணிப்பது என்பதை அரசியல்வாதிகள் அறிந்துள்ளனர் என்றும் கவலை தெரிவித்தார், மனிலா கர்தினால் தாக்லே.

உலகில் எழுப்பப்பட்டுவரும் தடைச்சுவர்கள் மற்றும், முற்சார்பு எண்ணங்களுக்கு எதிராகவும் பேசிய கர்தினால் தாக்லே அவர்கள், மக்களை உண்மையிலேயே பாதிக்கும் நிகழ்வுகள் குறித்தும், அக்கூட்டத்தில் கேட்டறிந்தார் என, ஆசியச் செய்தி நிறுவனம் கூறியது.

உலக காரித்தாஸ் நிறுவனம், 165 தேசிய காரித்தாஸ் நிறுவனங்களைக் கொண்டு, ஏறக்குறைய 198 நாடுகள், மற்றும், யூனியன் பகுதிகளில் பிறரன்புப் பணியாற்றி வருகின்றது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.