2017-02-07 15:47:00

பொருளாதார, சமூக, ஆன்மீக வறுமையை அகற்றுவதற்கு கோரிக்கை


பிப்.07,2017. பொருளாதார வறுமையை மட்டுமன்றி, சமூக மற்றும் ஆன்மீக வறுமையையும் அகற்றுவதற்கு, கொள்கைகள் மற்றும் முதலீடுகளின் வழியாக, உலகத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார், திருப்பீட உயர் அதிகாரி ஒருவர்.

ஐ.நா.வில் நடைபெற்ற, சமூக முன்னேற்றத்தின் 55வது அமர்வில், நீடித்து நிலைத்திருக்கக்கூடிய வளர்ச்சியை எட்டுவதற்கு, வறுமையை ஒழிக்கும் யுக்திகள் என்ற தலைப்பு குறித்து உரையாற்றிய, ஐ.நா.வுக்கான, திருப்பீடப் பிரதிநிதி, பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், இவ்வாறு கேட்டுக்கொண்டார்.

மக்கள் பெருமளவில் குடிபெயர்தலுக்கும், கட்டாயமாக நாடுகளைவிட்டுப் புலம்பெயர்தலுக்கும், போர்களும், ஆயுத மோதல்களுமே முக்கிய காரணம் என்பதால், வன்முறை மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு, நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டுமெனவும் கூறினார் பேராயர் அவுசா.

வறுமையை ஒழித்து, நிலையான அமைதியைக் கட்டியெழுப்ப நாம் விரும்பினால், இரத்தம் சிந்துதலை ஏற்படுத்தும் வன்முறை முடிவுக்கு வரவேண்டும் என்று வலியுறுத்திய பேராயர் அவுசா அவர்கள், இளையோருக்கு கல்வி, வேலைவாய்ப்பு வழங்குவதன் வழியாக, அவர்களின் வளர்ச்சிக்கு உதவ இயலும் என்றும் கூறினார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.