2017-02-08 15:54:00

மறைக்கல்வியுரை : அமைதிக்கும் தேறுதலுக்கும் ஆதாரம், நம்பிக்கை


பிப்.,08,2017.   மிகக்குளிராக இருந்த உரோம் நகரின் தட்ப வெப்ப நிலை, ஓரளவுக்கு மாற்றம் கண்டு, சிறிதளவு வெப்பம் அதிகரித்துள்ள நிலையில், இப்புதனன்று, குளிர்காற்றின் மத்தியிலும், சூரியனும் பிரகாசமாக ஒளிர்விட, வத்திக்கானின், அருளாளர் திருத்தந்தை 6ம் பவுல் அரங்கம், திருப்பயணிகளால் நிரம்பி வழிந்தது. கிறிஸ்தவ நம்பிக்கைக் குறித்து தான் வழங்கிவரும் புதன் மறைக்கல்வி உரைகளின் தொடர்ச்சியாக, இப்புதனன்று, “ஒருவரை ஒருவர் தேற்றுதல் மற்றும் அமைதியின் ஆதாரமாக, நம்பிக்கை உள்ளது” என்ற தலைப்பில் தன் சிந்தனைகளை மக்களோடு பகிர்ந்து கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்தவ நம்பிக்கைக் குறித்த நம் மறைக்கல்வி தொடரில், நம்பிக்கை எனும் நற்பண்பு என்பது நமதாண்டவரின் உயிர்ப்பிலும், நம் உயிர்ப்பு குறித்து அது தரும் வாக்குறுதியிலும் தன் அடித்தளத்தைக் கொண்டுள்ளது என நாம் ஏற்கனவே நோக்கியுள்ளோம். கிறிஸ்தவ நம்பிக்கை என்பது, முற்றிலும், தனிமனிதருக்குரிய ஒரு விடயம் சார்ந்தது, அதேவேளை, சமூகத்திற்கும் உரிய பொதுவான ஒன்று. மற்றவர்களின் தேவை குறித்த செயல்முறை அக்கறையின் வழியாகவும், ஒருவர் ஒருவருக்கான செபம் வழியாகவும், ஒருவர் ஒருவரை நம்பிக்கையில் உறுதிப்படுத்த வேண்டும் என புனித பவுல், துவக்க கால திருஅவையின் அங்கத்தினர்களை அடிக்கடி ஊக்கப்படுத்தினார். ஏழைகளுக்கும், விசுவாசத்தில் பலவீனமாக இருப்பவர்களுக்கும், துன்புறுவோருக்கும், சோதனைகளால் பலமிழந்து இருப்போருக்கும் இந்த ஆதரவு வழங்கப்பட வேண்டும். பிறரன்போடு தன் இணைப்பைக் கொண்டுள்ள கிறிஸ்தவ நம்பிக்கையானது, அன்புடன் கூடிய அக்கறை மற்றும் ஒருவர் ஒருவருக்கான ஆதரவு இவற்றைக் கொண்ட சமுதாய உடலாகவே மாறவேண்டும். உடல் என்பது திரு அவை, அதன் ஆன்மாவே, தூய ஆவியானவராகும். கிறிஸ்துவின் வாக்குறுதிகளில் நாம் கொண்டுள்ள விசுவாச சாட்சியம் என்பது, மேலும் விரிவடைந்து, சமூகம் முழுமையின் வாழ்வையும் வளப்படுத்த வேண்டும் என்பதற்கானது. இருளான மற்றும் துன்பம் நிறைந்த நேரங்களில், நம்பிக்கை என்பது அவ்வளவு எளிதான ஒன்று அல்ல என்பது நமக்குத் தெரியும். இருப்பினும், கடவுளின் பராமரிப்பில் முழு அக்கறை கொண்டவர்களாக, அனைத்து மனித குடுமபத்திற்கும் நம்பிக்கையின் வாழும் சாட்சிகளாக செயல்படும் வகையில் நம் சமூகங்கள் தொடர்ந்து உழைப்பதற்கு, நம் இதயங்களில் குடியிருக்கும் தூய ஆவி நமக்கு கற்பிப்பாராக.

இவ்வாறு, தன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாய்க் கிழமையன்று ஜப்பானில்,  Justo Takayama Ukon  என்ற பொதுநிலையினர், அருளாளராக அறிவிக்கப்பட்டது குறித்து எடுத்துரைத்தார். விசுவாச வலிமை, மற்றும், பிறரன்பிற்கான அர்ப்பணத்தின் சாட்சியமாக விளங்கும் இந்த அருளாளர், 1615ம் ஆண்டு மனிலாவில் மறைசாட்சியாக உயிரிழந்தார்.

மேலும், இப்புதனன்று, திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட, 'மனித வர்த்தகத்திற்கு எதிரான உலக விழிப்புணர்வு மற்றும் செப நாள்' குறித்தும் நினைவூட்டி, இத்தகைய துன்ப நிலைகளுக்கு உள்ளாகும் மக்களின், குறிப்பாக, சிறார்களின் விடுதலைக்கு அனைவரும் உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

வரும் சனிக்கிழமையன்று, 25வது நோயுற்றோர் உலக நாள் சிறப்பிக்கப்படவிருப்பதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைத்து நோயுற்றோருக்காகவும், அவர்களை பராமரிப்பவர்களுக்காகவும் சிறப்பான விதத்தில் செபிக்குமாறு அழைப்பு விடுத்தார்.

இறுதியில், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.