2017-02-09 15:06:00

பாசமுள்ள பார்வையில்.. உடல், உள்ள மருத்துவர் அன்னை மரியா


இயேசு சிலுவையில் தொங்கி உயிர்விட்ட அந்த இறுதி மூன்று மணி நேரங்கள் பற்றிய செபத்தில், ”கிறிஸ்துவே, நீர் என்னை அழைக்கும் வேளையில், உம் அன்னை எனக்குப் பாதுகாவலராக நிற்பாராக” என, நம் மகிழ்வான மரணத்திற்காகச் செபிக்கும் வரிகள் உள்ளன. எனவே, அன்னை மரியா, உடலுக்கு மட்டுமல்ல, உள்ளத்துக்கும் மருத்துவர். அன்னை மரியாவை, நோயுற்றோரின் நலமே என்று, பாமாலையில் நாம் செபிக்கும்போது, நமக்கு உடல்நலத்தை மட்டுமல்ல, நமக்கு மீட்பையும் பெற்றுத் தருமாறு அன்னையிடம் மன்றாடுகிறோம். இயேசு, நம் உடலுக்கும், ஆன்மாவுக்கும் குணமளிக்கும் விண்ணக மருத்துவர். இதற்கு நற்செய்தியில் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. இயேசு முடக்குவாதமுற்றவரைக் குணமாக்கியபோது, மகனே உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்று முதலில் சொன்னார். பின்னர், நீ எழுந்து உன்னுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு, உனது வீட்டுக்குப் போ என்றார். (மாற்.2:5,10). அன்னை மரியா, இயேசுவின் எடுத்துக்காட்டைப் பின்பற்றுபவர் என்பதால், அன்னை, நோயுற்றோர் மீது சிறப்பான அன்பு கொண்டுள்ளார். வேளாங்கண்ணி, மடு, லூர்து, பாத்திமா என, அன்னை மரியா திருத்தலங்களில் நடைபெறும் எண்ணற்ற அரும்செயல்கள் இதற்கு எடுத்துக்காட்டுகள். புனித குழந்தை தெரேசா சிறுமியாக இருந்தபோது, கடும் நோயால் தாக்கப்பட்டு இறக்கும் நிலையில் இருந்தார். அப்போது அவரின் படுக்கையருகில் இருந்த அன்னை மரியா திருவுருவம், அவரைப் பார்த்து புன்முறுல் பூத்தது. அவரும் நலமடைந்தார். “ஓ அன்னையே! தீராத கடும் நோய்களின் மருத்துவரே, எனது ஆன்மாவின் பல புண்களைக் குணமாக்கு” என புனித சமைன் ஸ்டாக் செபித்தார். இவ்வாறு, பல புனிதர்கள் அன்னை மரியாவை, உடலுக்கும், உள்ளத்திற்கும் நலமளிக்கும் தாய் என்று சொல்லியுள்ளனர். கி.பி.593ம் ஆண்டில் உரோம் நகரம் கொள்ளை நோயால் (Black Plague) தாக்கப்பட்டபோது, உரோம் மேரி மேஜர் பசிலிக்காவிலுள்ள அன்னை மரியா திருவுருவப் படத்தை, திருத்தந்தை புனித கிரகரி அவர்கள், நகரைச் சுற்றி பக்தியோடு எடுத்துச் சென்றார். கொள்ளை நோயும் நீங்கியது. எனவே, மரியா உரோம் நகருக்குச் சுகம் தந்தவர் என்ற பொருளில் மரியா சாலுஸ் ரோமானி (Maria Salus Populi Romani) என்று, இப்படம் தனி மரியாதை பெற்றுள்ளது. அதேபோல், லெப்பாந்தோ போரின்போது, 1571ம் ஆண்டில், திருத்தந்தை 5ம் பத்திநாதரும் இதேபோல் இப்படத்தை நகரைச் சுற்றி பக்தியோடு எடுத்துச் சென்றார். போரில் வெற்றியும் கிடைத்தது.

ஆம். அன்னை மரியா, உடலுக்கும், உள்ளத்திற்கும் நலமளிக்கும் மருத்துவர்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.