2017-02-09 16:13:00

பெண்கள் இல்லையெனில், உலகில் நல்லிணக்கம் இருக்காது


பிப்.09,2017. பெண்கள் இல்லையெனில், இவ்வுலகில் நல்லிணக்கம் இருக்காது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் வழங்கிய மறையுரையில் கூறினார்.

இவ்வியாழன் திருப்பலியின் முதல் வாசகமான தொடக்க நூலில், இறைவன் பெண்ணைப் படைத்த நிகழ்வு இடம்பெற்றுள்ளதை மையமாகக் கொண்டு, திருத்தந்தை தன் மறையுரையை வழங்கினார்.

ஆணும், பெண்ணும் வேறுபட்டவர்கள் என்றாலும், ஒருவர் மற்றவரைவிட உயர்ந்தவர் அல்ல என்பதையும், இவ்வுலகில் நல்லிணக்கத்தைக் கொணர்வது பெண்களே என்பதையும் தன் மறையுரையில் தெளிவுபடுத்தினார் திருத்தந்தை.

60 ஆண்டுகள் திருமண வாழ்வை நிறைவு செய்திருந்த ஒரு தம்பதியரிடம், "உங்களில் யார் அதிக பொறுமைசாலி?" என்று தான் கேட்டதாகவும், அவ்விருவரும் சிறிது நேர சிந்தனைக்குப் பிறகு, "இருவருமே பொறுமைசாலிகள்தாம்" என்று சொன்னதையும் தன் மறையுரையில் குறிப்பிட்டத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதுவே, அவர்களது நீண்ட, திருமண வாழ்வின் வெற்றிக்கு அடித்தளம் என்று குறிப்பிட்டார்.

இன்றைய உலகில், பெண்கள் பல வழிகளில் கொடுமைகளுக்கு உள்ளாவதை சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, ஆண், பெண் சமநிலையையும், நல்லிணக்கத்தையும் குலைப்பது, ஒரு குற்றம் என்று எடுத்துரைத்தார்.

இவ்வியாழன் நற்செய்தியில் இடம்பெற்றுள்ள சிரிய பெனிசிய இனத்தைச் சேர்ந்த பெண்ணைக்குறித்துப் பேசியத் திருத்தந்தை, அப்பெண் காட்டிய நம்பிக்கையும், துணிவும் இறைவன் அவருக்கு வழங்கிய கொடைகள் என்று சுட்டிக்காட்டினார்.

மேலும், "நம்பிக்கை, புதியத் தொடுவானங்களைத் திறந்து, நாம் கற்பனை செய்து பார்க்கவும் இயலாத கனவுகளைக் காண வழி செய்கிறது" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக இவ்வியாழனன்று வெளியாயின.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.