2017-02-10 15:37:00

ஆண் துறவு சபைகளின் தலைவர்களுடன் திருத்தந்தை


பிப்.10,2017. பக்குவமான நிலையை அடைவதற்கு இளையோர் மேற்கொள்ளும் வாழ்வுப் பயணத்தில், திருஅவை, அவர்களோடு பயணம் செய்ய வேண்டும் என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கூறியுள்ளார்.

உலகளாவிய ஆண் துறவு சபைகளின் தலைவர்கள் அவையின் (USG) 88வது பொது அவையில் கலந்துகொண்ட 140 பிரதிநிதிகளுடன் நடத்திய ஒரு கலந்துரையாடலில், அடுத்த உலக ஆயர்கள் மாமன்றம், இளையோரை மையப்படுத்தி இடம்பெறவுள்ளதை விளக்கியபோது, இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கடவுளுக்கும், உலகுக்கும் திறந்த மனம் கொண்டவர்களாய் வாழ்வதற்குரிய பாதையை, இளையோர் கண்டுணர்வதற்கு, அவர்களோடு திருஅவை பயணம் செய்ய வேண்டுமென்றும், நம் செயல்கள், கடவுளைக் கண்டடையும் விதத்தில் அமைய வேண்டுமென்றும் கூறினார் திருத்தந்தை.

மேற்கத்திய நாடுகளில், இறையழைத்தல் குறைந்து வருவதும், அதேநேரம், நிறைய இறையழைத்தல்களைப் பெறுகிறோம் என்று சொல்லும் சபைகளும், தனக்கு கவலை தருவதாக உள்ளது என்றும் கூறியத் திருத்தந்தை, பழமைவாத போக்குடைய சபைகள் பற்றிய விமர்சனங்களையும் முன்வைத்தார்.

சபை ஆரம்பிக்கப்பட்ட கூறுகளுடன், தொலைநோக்கு பார்வையில் வாழ்தல் மிகவும் முக்கியமானது எனவும் குறிப்பிட்ட திருத்தந்தை, திருத்தந்தையாக, தான் தேர்ந்தெடுக்கப்பட்டது, தனது தலைமைப் பணி போன்றவைகள் பற்றியும் பகிர்ந்து கொண்டார்.

துறவு சபைகளுக்குள் நிலவும் பல்வேறு ஒழுங்கற்ற நடவடிக்கைகளை கையாள்வது குறித்து ஆலோசனைகளையும் வழங்கியத் திருத்தந்தை, நெருக்கடிகள், எதிர்ப்புகள் போன்றவை மத்தியில், தான் அமைதியில் வாழ்வது குறித்தும் பகிர்ந்து கொண்டார்.

பிரச்சனைகள் வரும்போது, தான் தூக்க மாத்திரைகள் எடுப்பதில்லை, ஆனால், அவற்றை ஒரு தாளில் எழுதி, தனது அறையிலுள்ள, உறங்கும் புனித யோசேப்பு திருவுருவத்தின் அடியில் வைத்து விடுவதாகவும், இதனால் தான் நிம்மதியாகத் தூங்குவதாகவும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

2016ம் ஆண்டு நவம்பர் 25ம் தேதி, ஆண் துறவு சபைகளின் 140 தலைவர்களுடன் திருத்தந்தை நடத்திய இந்தக் கலந்துரையாடலின் முழுத்தொகுப்பு, இயேசு சபையினர் நடத்தும் La Civiltà Cattolica இதழில், இச்சனிக்கிழமையன்று வெளியாகவுள்ளது. இக்கலந்துரையாடலின் சுருக்கம், Corriere della Sera என்ற இத்தாலிய தினத்தாளில், இவ்வியாழனன்று வெளியானது.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.