2017-02-10 15:23:00

திருத்தந்தை : சோதனை நேரத்தில் செபிக்க வேண்டும்


பிப்.10,2017. நாம் எல்லாருமே அனுபவிக்கும் சோதனைகளின் பலவீனத்தில், ஆண்டவரிடமிருந்து நம்மை மறைத்துக் கொள்ளாமல், எழுந்து முன்னோக்கிச் செல்வதற்கு, இயேசுவின் அருள் நமக்கு உதவுகின்றது என்று, இவ்வெள்ளி காலை திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வெள்ளி காலை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில், ஆதாம், ஏவாள், இயேசு ஆகிய மூவருக்கும் சாத்தான் அளித்த சோதனைகளை மையப்படுத்தி மறையுரையாற்றிய திருத்தந்தை, சாத்தானுடன் உரையாடுவது, இறுதியில் பாவத்திலும், ஊழலிலும் கொண்டுபோய்ச் சேர்க்கும் என்பதால், சாத்தானுடன் உரையாடல் நடத்தவே கூடாது என்று கூறினார்.

சாத்தான் நம்மை ஏமாற்றுவதற்கு உரையாடலைப் பயன்படுத்துகின்றது என்றும், ஊழல் சிறிய காரியங்களில் தொடங்குகின்றது என்றும், சோதனை நேரங்களில், உரையாடலில் ஈடுபடாமல், செபிக்க வேண்டுமென்றும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.  

இக்காலத்தில் ஊழல் பற்றி பரவலாகப் பேசப்படுகின்றது, தினத்தாள்களில், பெரிய ஊழல்கள் பற்றி வாசிக்கிறோம், ஒரு கிலோவுக்குப் பதில், 900 கிராமாக ஆக்குவோம் என, சிறிய காரியங்களில் தொடங்கி, பெரிய ஊழல் இடம்பெறுகின்றது என்ற திருத்தந்தை, ஊழலிலும் பாவத்திலும் நாம் சிக்கிவிடாமல் இருப்பதற்காக, நாம் ஆண்டவரின் உதவியை மன்றாட வேண்டுமென்றும் கூறினார்.

சோதனை நேரங்களில் நாம் பலவீனமாக இருப்பதாலேயே ஏமாற்றப்படுகிறோம், எனவே, இதிலிருந்து எழுந்து முன்னோக்கி நடப்பதற்கு, இயேசு நமக்கு உதவுகிறார், அவரின் அருளை மன்றாடுவோம் என, மறையுறையில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.