2017-02-10 15:44:00

மொரோக்கோ : இஸ்லாமிலிருந்து மாறுகிறவர்க்கு மரண தண்டனை இரத்து


பிப்.10,2017. மொரோக்கோ நாட்டில், இஸ்லாம் மதத்திலிருந்து வேறு மதத்தைத் தழுகிறவர்கள், மதச் சட்டத்தின்கீழ், மரண தண்டனையால் தண்டிக்கப்பட மாட்டார்கள் என, அந்நாட்டு உயர்மட்ட சமயக் குழு அறிவித்திருப்பது, மிக முக்கியமான நடவடிக்கை என்று, கூறியுள்ளார் இஸ்லாம் பற்றிய வல்லுனர் ஒருவர்.

மொரோக்கோ உயர்மட்ட சமயக் குழுவின் இவ்வறிவிப்பு குறித்து ஆசியச் செய்தி நிறுவனத்திடம் கூறிய, எகிப்து நாட்டு இயேசு சபை அருள்பணியாளர் சமீர் காலில் அவர்கள், ஒருவரின் மதம் மாறுதல், அரசியல் சதி போன்ற விவகாரங்களோடு தொடர்புடையதாய் இருந்தால் மட்டுமே, அவர் தண்டிக்கப்படுவார், ஆனால், வெறும் மத மாற்றத்தை வைத்து, ஒருவர் தண்டிக்கப்பட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய சூழலுக்கு ஏற்ற வகையில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது எனவும், இவ்வேளையில், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களை, மதம் மாறுவதற்குத் தூண்டாமல் இருப்பதில் கவனமாய் இருக்க வேண்டுமெனவும், அருள்பணி சமீர் காலில் அவர்கள் கூறினார்.

ஏறக்குறைய 3 கோடியே 37 இலட்சம் மக்கள் வாழும் மொரோக்கோவில், 99 விழுக்காட்டினர் முஸ்லிம்கள்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.