2017-02-11 15:42:00

வன்முறைக்கு அஞ்சி வரும் மக்களைக் குடியமர்த்தும் பணி தொடரும்


பிப்.11,2017. புலம்பெயர்ந்தோரை நாட்டில் குடியமர்த்துதல் மற்றும், முஸ்லிம் நாடுகளைக் குறிவைத்து பயணங்களுக்குத் தடை போன்ற விவகாரங்கள் தொடர்பாக, அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் டொனால்டு டிரம்ப் அவர்களின் நிர்வாகம் வெளியிட்ட உத்தரவுகளுக்கு எதிராக, நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதை வரவேற்றுள்ளனர் அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள்.

அமெரிக்காவின் சியாட்டில் நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் குடியேற்றதாரர் பணிக்குழுத் தலைவர் ஆயர் ஜோ வாஸ்கெஸ் அவர்கள், சட்டத்தையும், அமெரிக்க நீதித்துறை நடைமுறைகளையும், மதிக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

அடக்குமுறைகளுக்கு அஞ்சி, அமெரிக்காவுக்கு வருகின்ற புலம்பெயர்ந்தோரை, குடியமர்த்தும் பணியை, ஆயர்கள் தொடர்ந்து ஆற்றவிருப்பதாகவும் கூறினார், ஆயர் வாஸ்கெஸ்.

டிரம்ப் அவர்களின் நிர்வாகம் தடை விதித்திருந்த நாடுகளைச் சேர்ந்த எவரும், அமெரிக்க ஐக்கிய நாட்டில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதற்கு, எவ்விதச் சான்றுகளையும், அரசு சார்பில் சமர்ப்பிக்கப்படவில்லை என்று, நீதிமன்றம் கூறி, அரசின் தடை உத்தரவுக்கு எதிராகத் தீர்ப்பளித்துள்ளது.

டிரம்ப் அவர்கள் பிறப்பித்த சில நிர்வாக உத்தரவுகளின்படி, ஈராக், சிரியா, ஈரான், லிபியா, சொமாலியா, சூடான், ஏமன் ஆகிய ஏழு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்கு வர தடையாக அமைந்தது.

இந்த உத்தரவுகளுக்கு எதிராக அமெரிக்காவில் மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அமெரிக்க நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடரப்பட்டன.

ஆதாரம் : CNA / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.