2017-02-13 16:44:00

புலம்பெயர்ந்த சிறார்களை கைவிடாதீர் - கர்தினால் வேண்டுகோள்


பிப்.,13,2017. உறவினர்களற்ற 3000 புலம்பெயர்ந்த சிறார்களை நாட்டிற்குள் ஏற்க மறுக்கும் இங்கிலாந்து அரசின் செயல்பாடுகள் குறித்து, தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார், இங்கிலாந்து கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ்.

குடிபெயர்தல் குறித்த சட்டத்தின் 67ம் பிரிவில் உருவாக்கப்பட்ட திருத்தத்தை, தற்போது இங்கிலாந்து அரசு திரும்பப் பெறுவதன் வழியாக, உறவுகளற்ற புலம்பெயர்ந்த சிறார்களை நாட்டிற்குள் ஏற்றுக்கொள்ளும் ஒழுக்கரீதி கடமையிலிருந்து இங்கிலாந்து அரசு பின்வாங்குவதாக தெரிகிறது என உரைத்த வெஸ்ட்மின்ஸ்டர் பேராயர், கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள், கடந்த ஆண்டு 900க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த சிறாருக்கு புகலிடம் கொடுத்ததாக உள்துறை அமைச்சகம் தெரிவிக்கின்றபோதிலும், காத்திருக்கும் சிறார்களின் எண்ணிக்கை இதைவிட பலமடங்கு என கூறினார்.

புலம்பெயர்ந்தோரிடையே பணியாற்ற விரும்பும் பல்வேறு இங்கிலாந்து அமைப்புகளின் உதவியுடன், புலம்பெயர்ந்த சிறாருக்கு புகலிடம் கொடுப்பது குறித்து அரசு சிந்திக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் கர்தினால்.

மனிதர்களை வியாபாரப் பொருள்களாக கடத்துவதற்கு எதிராக சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் இங்கிலாந்து நாடு, புலம்பெயர்ந்த சிறார்களை ஏற்காமல் அநாதைகளாக விடுவது, மனித வியாபாரம் செழிக்கவே உதவும் என, மேலும் கூறினார், கர்தினால் நிக்கோல்ஸ்.

ஆதாரம் :  ICN/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.