2017-02-13 16:50:00

மனித மாண்புக்கு ஊறுவிளைவிப்பவை, கொலைக்கு ஈடானவை


பிப்.,13,2017. மனித மாண்புக்கு ஊறுவிளைவிக்கும் செயல்கள், கொலைகள் எனுமளவிற்கு கொடூரம் இல்லையெனினும், கொலைகளைப் போன்று, அதே வரிசையில் அவைகளும் வருகின்றன என்றார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவின் மலைப்பொழிவு வார்த்தைகள் அடங்கிய இஞ்ஞாயிறு திருப்பலி வாசகம் குறித்த தன் சிந்தனைகளை, ஞாயிறு மூவேளை செப உரையின்போது வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனின் கட்டளைகளை மேலோட்டமாக மட்டும் புரிந்து கொள்ளாமல், அன்பு, பிறரன்பு மற்றும் இரக்கத்தால் எடுத்துச் செல்லப்படும் நீதியின் துணைகொண்டு அவற்றைப் புரிந்துகொள்ள முயலவேண்டும் என்றார்.

மோசேயின் சட்டங்களை இவ்விதமே புரிந்துகொண்டு அவற்றிற்கு அர்த்தம் கொடுக்க இயேசு விரும்பினார் என்று கூறியத் திருத்தந்தை, கொலைசெய்தல், ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்குதல், ஆணையிடுதல் போன்றவைகள் பற்றிப் பேசும்போது, மற்றவர்களுக்கு தீமைச் செய்வதை உள்நோக்கமாகக் கொண்ட இவை, அதன் வழி வரும் செயல்களுக்கு ஈடானவையே என இயேசு சொல்லவந்ததையும் சுட்டிக்காட்டினார்.

மற்றவர்களை அவமானப்படுத்த முயலும்போது, நாம் அவர்களை மனதளவில் சாகடிக்கிறோம் எனவும் உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆணையிடுதல் என்பது மனித உறவுகளில் பாதுகாப்பின்மையின் அடையாளம், ஆகவே, அவற்றைக் கைவிடவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.