2017-02-14 15:58:00

இலங்கை : தமிழர்களின் நிலங்களைத் திரும்பப்பெற உரிமை குழுக்கள்


பிப்.14,2017. இலங்கையில் உள்நாட்டுச் சண்டையின்போது, இராணுவத்தால் எடுத்துக்கொள்ளப்பட்ட தங்களின் நிலங்களை திரும்பப் பெறுவதற்கு, தொடர்ந்து போராடிவரும், தமிழ் விவசாய மற்றும் மீனவர் குடும்பங்களுடன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கும் நோக்கத்தில், மனித உரிமை குழுக்கள் பேரணி ஒன்றை நடத்தியுள்ளன.

இலங்கையின் விமானப்படை மற்றும் இராணுவத்திடம் தற்போது இருக்கும் 212 ஹெக்டேர் நிலங்களைத் திரும்பப் பெறுவதற்கு, சனவரி 31ம் தேதியிலிருந்து போராடிவரும் ஏறக்குறைய நானூறு தமிழ் குடும்பங்களுடன், அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள் மற்றும், மனித உரிமை குழுக்கள், நெகோம்போ பேருந்து நிறுத்தத்தில் போராட்டத்தில் ஈடுபட்டன.

இதில் கலந்துகொண்ட, திருக்குடும்ப சபை அருள்சகோதரி Rasika Peiris அவர்கள் கூறுகையில், முன்னாள் முல்லைத்தீவு போர்ப் பகுதிகளிலுள்ள தங்களின் சொந்த நிலங்களை இம்மக்கள் திரும்பக் கேட்கின்றார்கள், சமுதாயம், இவர்களின் வேதனைகளுக்கு உரிய கவனம் செலுத்தவில்லை என்று தெரிவித்தார்.

ஊடகங்களின் கூற்றுப்படி, 27 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஹெக்டேர் நிலங்கள் இராணுவத்தால் அபகரிக்கப்பட்டன, ஆனால், 162 ஹெக்டேர் நிலங்கள் மட்டுமே திருப்பி அளிக்கப்பட்டுள்ளன என, அருள்பணி Nandana Saparamadhu அவர்கள் கூறினார்.

இதற்கிடையே, மகிந்த இராஜபக்க்ஷே ஆட்சியில், (2005-2014) ஏறக்குறைய எண்பதாயிரம் ஹெக்டேர் நிலங்கள், அரசியல்வாதிகள் மற்றும், இராணுவத்தால் கட்டாயமாக அபகரிக்கப்பட்டன என, ஒரு சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறக்கட்டளை கூறுகிறது.

ஆதாரம் : UCAN/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.