2017-02-15 15:28:00

திருத்தந்தையின் மறைக்கல்வியுரை : தற்பெருமை கொள்வது நல்லதல்ல‌


பிப்.,15,2017.   'கிறிஸ்தவ நம்பிக்கை' என்ற தலைப்பில் கடந்த சில வாரங்களாக, மறைக்கல்வி உரையை ஒரு தொடராக வழங்கி வரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று, புனித பவுல், உரோமையருக்கு எழுதிய மடலின், பிரிவு எண், ஐந்தின் துவக்கத்தில் காணப்படும் வார்த்தைகளை மையமாக வைத்து, 'நம் நம்பிக்கை எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது' என்ற தலைப்பில் தன் சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார்.

தற்புகழ்ச்சி கொள்வது நல்லதல்ல என, நாம் சிறுபிள்ளைகளாக இருந்தபோதே நமக்கு எப்போதும் சொல்லித் தரப்பட்டுள்ளது. நாம் யார், நம்மிடம் இருப்பது என்ன, என்பவைகளைக் கொண்டு நாம் தற்பெருமையுடன் பேசும்போது, நம்மைவிட வாழ்வில் வசதிக் குறைந்தவர்களை நாம் அவமரியாதையுடன் நடத்துகிறோம். இருப்பினும், தூய பவுல் அவர்கள், நாம் தற்புகழ்ச்சி காட்டும்படி நம்மை நோக்கி இருமுறை கூறுவது, நமக்கு வியப்பு தருவதாக உள்ளது. முதலில், நாம் விசுவாசம் என்னும் கொடை வழியாக இயேசு கிறிஸ்துவில் பெறும் எண்ணற்ற அருள் குறித்து தற்பெருமை கொள்வோம் என்கிறார் தூய பவுல். அன்பின் கொடையாகவே அனைத்தையும் படைத்தார் இறைவன். அதன் வழியாகவே அவர், இயேசு கிறிஸ்துவில் நிறைவேற்றப்பட்ட மீட்புத் திட்டத்தை வெளிப்படுத்தினார். நம் மகிழ்ச்சி மற்றும் புகழ்பாடலின் காரணமாக, இந்த அருளே இருக்க வேண்டும் என, அவர் நமக்கு அழைப்பு விடுக்கிறார். நாம் அதனை ஆற்றும்போது, நம் வாழ்விலும் உறவுகளிலும் இறை அமைதி வழிந்தோடுவதை உணரலாம். துன்பங்களைத் தாங்கிக் கொள்வதிலும் பெருமகிழ்ச்சி கொள்கிறோம் என்கிறார் புனித பவுல். ஏனெனில், அச்சமும், ஏமாற்றங்களும், துன்பங்களும் இல்லாத நிலையல்ல இறை அமைதி என்பது. மாறாக, கடவுள் நம்மை அன்புகூர்கிறார், என்றும் நம்மோடு உள்ளார் என்பதைக் குறிப்பதாகும். தூய பவுல் கூறுவதுபோல், இந்த அமைதியானது, பொறுமையுள்ளது. எந்த துன்பகரமான சூழலிலும் இறைவனின் இரக்கமும் நன்மைத்தனமும் நம்முடனேயே உள்ளது, இறைவனிடமிருந்து நம்மை எதுவும் பிரிக்க முடியாது என்பதை நாம் அறிவோம். ஆகவே, கிறிஸ்தவ நம்பிக்கை என்பது, நாம் யார் என்பதையோ, நம் ஆற்றல் என்ன என்பதையோ சார்ந்தது அல்ல, மாறாக, நம் ஒவ்வொருவருக்குமான இறைவனின் அன்பைச் சார்ந்து உள்ளது. நாம் நம்பிக்கையின் கருவிகளாகச் செயல்படுவோமாக. அதன் வழியாக, நம் இறைத்தந்தை குறித்து, அதாவது, எவரையும் ஒதுக்கி வைக்காமல், அனைவருக்கும் தன் இல்லத்தை திறந்து வைக்கும் அவர் குறித்து பெருமை கொள்வோமாக. கிறிஸ்தவ நம்பிக்கை எனும் இந்தச் செய்தியோடு, ஒருவரை ஒருவர் பலப்படுத்தும் மக்கள் கூட்டமாக நாம் இருப்போமாக.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் வாழ்த்துக் கூறியதுடன், தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.