2017-02-16 15:21:00

மனித மனதில் போர் துவங்குகிறது - திருத்தந்தையின் மறையுரை


பிப்.16,2017. மனித மனதில் போர் துவங்குகிறது, எனவே, நாம் அனைவருமே அமைதியைக் காப்பதற்கு பொறுப்பாளர்கள் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் வழங்கிய மறையுரையில் கூறினார்.

தொடக்க நூலில், கடவுள் நோவாவுடன் மேற்கொண்ட உடன்படிக்கை கூறப்பட்டுள்ள முதல் வாசகத்தை மையப்படுத்தியும், நோவா பேழையிலிருந்து அனுப்பப்பட்ட புறா, கடவுள் பதித்த வானவில், மற்றும் உடன்படிக்கை என்ற உருவகங்களைப் பயன்படுத்தியும் மறையுரை வழங்கினார், திருத்தந்தை.

பேழையிலிருந்து அனுப்பப்பட்ட புறா, ஒலிவக் கிளை ஒன்றைக் கொணர்ந்தது என்பதைக் குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை, பெருவெள்ளத்திற்குப் பின், கடவுள் மனிதர்களுக்கு வழங்கிய முதல் பரிசு, அமைதி என்பதைக் குறிக்கவே, ஒலிவக் கிளையை புறா கொணர்ந்தது என்று எடுத்துரைத்தார்.

இறைவன் வழங்கும் பரிசான அமைதியைக் கட்டிக்காப்பது மிகக் கடினமான ஒரு சவால் என்பதை, தன் மறையுரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை,  ஆயுதங்களை உருவாக்கி, விற்பனை செய்யும் சக்தி மிக்க மனிதர்கள், இவ்வுலகம், அமைதி இழந்து, போரினால் மக்கள் இறப்பதை விரும்புகின்றனர் என்று, வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

உலகில் மனிதர்கள் சிந்தும் ஒவ்வொரு இரத்தத் துளிக்கும் இறைவன் ஈடு கேட்பார் என்று, முதல் வாசகத்தில் கூறப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, அமைதியில் வாழ்வதுபோல் உணரும் நாமும், உலகில் சிந்தப்படும் இரத்தத்திற்காக, இறைவனிடம் கணக்கு கொடுக்க கடமைப்பட்டுள்ளோம் என்று கூறினார்.

நம் ஒவ்வொருவரிடமும் துவங்கும் போர், நமது குடும்பங்கள், நண்பர்கள், சமுதாயம் என்ற பல நிலைகளில் பரவி, இறுதியில் உலக அளவில் தொடர்கிறது என்று வலியுறுத்திக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எனவே, நமக்குள் உருவாகும் போரைத் தடுப்பது, அனைவருக்கும் உள்ள முதல் கடமை என்று எடுத்துரைத்தார்.

தான் ஒரு சிறுவனாக இருந்தபோது, இரண்டாம் உலகப் போரின் முடிவு அறிவிக்கப்பட்டதைக் கேள்விப்பட்டதையும், அவ்வேளையில் தன்னுடைய அன்னையும், அடுத்த வீட்டு அன்னையும் ஒருவரை ஒருவர் தழுவி, ஆனந்த கண்ணீர் விட்டு அழுததையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறையுரையில் நினைவுகூர்ந்தார்.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழனன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், "பொருளளவிலும், ஆன்மீகத்திலும் நிலவும் வறுமைக்கு எதிரான சண்டையில் இணைவதற்கு உங்களை அழைக்கிறேன். நாம் ஒன்றாகச் சேர்ந்து, அமைதியையும், நட்பு பாலங்களையும் கட்டுவோம்" என்ற சொற்கள் இடம்பெற்றுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.