2017-02-17 16:13:00

எந்த ஒரு மனிதரும் குற்றவாளி அல்ல, திருத்தந்தை பிரான்சிஸ்


பிப்.17,2017. மண்ணின் மைந்தர்கள், ஆன்மீகப் போதகர்கள், அரசியல் தலைவர்கள் உட்பட, எல்லா நிலைகளில் வாழும் மக்கள் அனைவரும், இறைவனின் படைப்பைப் பாதுகாப்பதற்கு, காலம் தாமதிக்காமல், உடனடியாகச் செயல்படுமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கேட்டுக்கொண்டுள்ளார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் கலிஃபோர்னியாவில் நடைபெறும், தேசிய சமூகநல இயக்கங்கள் மாநாட்டிற்குச் செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சமூக நீதி, நம் தாய் பூமியைப் பாதுகாத்தல், குடியேற்றதாரர் சார்பாகச் செயல்படுதல் ஆகியவற்றுக்காகத் தங்களை அர்ப்பணித்துள்ள, இந்த அமைப்புகளை ஊக்கப்படுத்தியுள்ளார்.

இவ்வேளையில், சுற்றுச்சூழல் நெருக்கடி, அமைதிக்காக உழைத்தல் ஆகிய இரு தலைப்புகள் குறித்த சிந்தனைகளை, சிறப்பாக வழங்க விரும்புவதாக, அச்செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, அறிவியலையும், இயற்கையின் குரலையும் புறக்கணித்து நடக்கும்போது என்ன நிகழும் என்பது, நம் எல்லாருக்கும் தெரியும் என்று கூறியுள்ளார்.

உலக சமூகநல அமைப்புகளின் அண்மைக் கூட்டத்தில் கூறியது போன்று, எந்த ஒரு மனிதரும் குற்றவாளி அல்ல, எந்த ஒரு மதமும் பயங்கரவாதி அல்ல, கிறிஸ்தவப் பயங்கரவாதம், யூதப் பயங்கரவாதம், முஸ்லிம் பயங்கரவாதம் என்பவை கிடையாது, என மீண்டும் கூற விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

எனினும், ஏழைகளும், கடும் வறுமையில் வாழும் மக்களும், வன்முறையில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டப்படுகின்றனர் என்றும், இம்மக்கள், சம வாய்ப்புகளின்றி, பலவிதமான துன்பங்களுக்கும், மோதல்களுக்கும், உள்ளாகி, இறுதியில் பெருமளவில் தங்கள் இடங்களைவிட்டு வெளியேறுகின்றனர் என்றும் கூறியுள்ளார், திருத்தந்தை.

அனைத்து மக்களிலும், அனைத்து மதங்களிலும், அடிப்படைவாத மற்றும், வன்முறை மிகுந்த தனியாள்கள் உள்ளனர் என்றும், வெறுப்பு மற்றும், அந்நியர் மீதுள்ள வெறுப்பால், இவர்கள் அதிகம் வலிமையடைகின்றனர் என்றும், பயங்கரவாதத்தை அன்பால் எதிர்கொண்டு, அமைதிக்காக நாம் உழைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

புனித பிரான்சிஸ் அசிசியார் போன்று, வெறுப்புள்ள இடத்தில் அன்பையும், காயப்பட்ட இடத்தில் மன்னிப்பையும், பிரச்சனை உள்ள இடத்தில் ஒன்றிப்பையும், தவறு உள்ள இடத்தில், உண்மையையும் விதைப்பதற்கு, நம்மை முழுமையாக அர்ப்பணிப்போம் எனவும், அந்த அமைப்புகளின் பணிக்காகத் தான் செபிப்பதாகவும் கூறியுள்ள திருத்தந்தை, தனக்காகச் செபிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். 

திருப்பீடத்தின் ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற அவையின் ஆதரவுடன், அமெரிக்க ஐக்கிய நாட்டு கத்தோலிக்க மனித முன்னேற்ற அமைப்பு, அமைப்புகள் வழியாக மக்களை முன்னேற்றும் சமூகங்களின் தேசிய இயக்கம் (PICO) ஆகிய இரண்டும் இணைந்து இம்மாநாட்டை நடத்துகின்றன. கலிஃபோர்னியாவில், பிப்ரவரி 16, இவ்வியாழனன்று தொடங்கிய இந்த மாநாடு, பிப்ரவரி 18, இச்சனிக்கிழமையன்று நிறைவடையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.