2017-02-17 15:36:00

பாசமுள்ள பார்வையில்...: பாசத்திற்கு எதிர்பார்ப்புகள் குறைவே


இரவில் திடீரென்று, மகன் வீறிட்டு அழுதான். பக்கத்திலேயே கண்விழித்து பார்த்திருந்த தாய் கோசலை, அவனை அணைத்தவாறே நெற்றியைத் தொட்டுப் பார்த்தார். இரண்டு நாட்களாக இருந்த காய்ச்சல் இப்போது விட்டிருந்தது. 'என்ன மோகன், ஏதாவது கனவு, கினவு கண்டாயா', என கேட்டார் தாய். 'ஆமாம்மா, பாட்டியை யாரோ கிணற்றில் தள்ளி விடுவதுபோல் கனவு கண்டேன், அதுதான் பயந்து முழித்து விட்டேன்', என்றான் மகன். கடந்த மாதம்தான் கோசலையின் மாமியாரை முதியோர் இல்லத்தில் சேர்த்திருந்தார்கள். கடந்த மூன்று நாட்களாக கணவரும் வீட்டிலில்லை.  அலுவலகம் தொடர்பாக மும்பைக்கு பயணம் சென்றிருக்கிறார். இதற்கிடையில், மறு நாள், மகனுக்கு 10வது பிறந்த நாள். மகனின் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டுமே என தாய் மனது துடித்தது. மறு நாள் காலையில் மகனையும் அழைத்துக்கொண்டு, மாமியாரிடம் ஆசீர்வாதம் வாங்க ஆட்டோவில் முதியோர் இல்லத்திற்கு சென்றார் கோசலை. முதியோர் இல்லத்தில் கணவனின் தாயில்லை. அங்கிருந்தவர் சொன்னார், 'அம்மா! உங்கள் மாமியார் விடியற்காலையிலேயே எழுந்து, தன் பேரனின் பிறந்த நாள் எனக்கூறி, வேண்டுதலாக, பழநிக்கு நடைபயணமாகச் சென்றுவிட்டார்' என்று. 'ஐயயோ, அப்படியா? நாங்கள் இன்று வந்தால், எங்களிடம் ஏதாவது சொல்லச் சொல்லியுள்ளார்களா?', என்று கேட்டார் கோசலை. 'இல்லையம்மா, ஒருவேளை, உங்களை அவர்கள் இன்று எதிர்பார்க்கவில்லையோ என்னவோ!’ என்றார் விடுதி காப்பாளர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.