2017-02-18 15:10:00

தாய்லாந்தில் அனைத்து மதத்தவருடன் தலத்திருஅவை ஒத்துழைப்பு


பிப்.18,2017. புத்த மதத்தினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட தாய்லாந்து நாட்டில், உரையாடல் வழியாக, அமைதியையும், நிலையான தன்மையையும் கட்டியெழுப்புவதற்கு, தனது ஒத்துழைப்பை வழங்குவதாக, அந்நாட்டு கத்தோலிக்கத் திருஅவை உறுதியளித்துள்ளது.

தாய்லாந்தின், தேரவாதா (Theravada) புத்த மதப் பிரிவின் புதிய தலைவரின் பணியேற்பு நிகழ்வுக்குச் செய்தி அனுப்பிய, தாய்லாந்து கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் Francis Xavier Kriengsak Kovidhavanij அவர்கள், தாய்லாந்து ஏனைய நாடுகளுக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் விதத்தில், ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று கூறியுள்ளார்.

தேரவாதா புத்த மதப் பிரிவின் புதிய தலைவர் Taan Chao Khun Somdej அவர்களுக்கு, இறைவன் ஞானத்தையும், நல்ல உடல்நலத்தையும் நிரம்பப் பொழியுமாறு செபிப்பதாகவும், தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார், பாங்காக் பேராயர், கர்தினால் Kovidhavanij.

கர்தினால் Kovidhavanij அவர்கள் தலைமையிலான ஆயர்கள் குழு, புத்த மதத் தலைவர் Somdej அவர்களை நேரிடையாகச் சந்தித்து, வாழ்த்து தெரிவித்து, இச்செய்தியையும் வழங்கியது. இம்மாதம் 7ம் தேதி, தாய்லாந்து பிரதமர், Prayut Chan-o-cha அவர்கள், அந்நாட்டு புத்த மதத் தலைவரை அதிகாரப்பூர்வமாக நியமித்தார். இத்தலைவரின் பணியேற்பு நிகழ்வு, இம்மாதம் 12ம் தேதி நடைபெற்றது.

தாய்லாந்து மக்கள் தொகையில், ஏறக்குறைய 93.6 விழுக்காட்டினர் புத்த மதத்தினர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தேரவாதா புத்த மதப் பிரிவினர். முஸ்லிம்கள், ஏறக்குறைய 4.6 விழுக்காட்டினர்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.