2017-02-18 14:47:00

பாப்புவா நியு கினியின் முக்கிய பிரச்சனை காலநிலை மாற்றம்


பிப்.18,2017. காலநிலை மாற்றத்தின் கடும் விளைவுகளை எதிர்கொள்ளும் பாப்புவா நியு கினி நாடு, அப்பிரச்சனைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டிய நிலையில் உள்ளது என, அந்நாட்டின் புதிய கர்தினால் John Ribat அவர்கள், CNA செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

பாப்புவா நியு கினி தீவு நாட்டைத் தாக்கிவரும் இராட்சத அலைகள் மற்றும், கடும் காற்றால், ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர் என்றும், இந்த இயற்கைச் சீற்றங்கள், தொடர்ந்து மக்களைப் பாதித்து வருகின்றன என்றும் கூறிய, கர்தினால் Ribat அவர்கள், கடற்கரையில் தற்காலிகச் சுவர்கள் எழுப்பப்பட்டிருப்பினும், அவைகளால் பேரலைகளுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை என்றும் தெரிவித்தார்.

தான் கர்தினாலாக அறிவிக்கப்பட்ட செய்தி, திருப்பீடத் தூதர் வழியாகவே கிடைத்தது எனவும், நாட்டின் சிறுபான்மை கத்தோலிக்க சமுதாயம் மட்டுமன்றி, ஏனைய கிறிஸ்தவ சபைகளும் வாழ்த்து தெரிவித்தன எனவும் கூறினார், கர்தினால் Ribat

பிரதமர் Peter O’Neill அவர்கள், நேரிடையாக தனக்கு வாழ்த்துத் தெரிவித்ததோடு, உள்ளூர் தினத்தாள்கள் மற்றும், தொலைக்காட்சியிலும் வாழ்த்துத் தெரிவித்தார் என்றார், பாப்புவா நியு கினியின் முதல் கர்தினால் Ribat.

இந்நாட்டில், 1950ம் ஆண்டிற்குப் பின்னர், தற்போது வெப்பநிலை 0.11 செல்சியுஸ் டிகிரி அதிகரித்து, கடல்மட்டமும், ஏழு மி.மீ. அளவு உயர்ந்திருப்பதாக, காலநிலை மாற்ற அறிக்கை ஒன்று கூறுகிறது.

பாப்புவா நியு கினி, பசிபிக் பெருங்கடலில், தென்மேற்குப் பகுதியிலுள்ள தீவு நாடாகும்.

ஆதாரம் : CNA / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.