2017-02-20 15:23:00

வாரம் ஓர் அலசல் – நிகழ்காலத்தைப் புரிந்துகொள்வதற்கு...


பிப்.20,2017. இன்றைய உலக அரசியல் நடப்புகளைப் பார்க்கும்போது, சமூகவலைத்தளம் ஒன்றில் வாசித்த, ஒரு குட்டிக் கதையோடு, நிகழ்ச்சியைத் தொடங்கலாம் என்று நினைக்கின்றோம். தனது நாட்டில் இருந்த கில்லாடித் திருடன் ஒருவனுக்குத் தண்டனை கொடுக்க முடியாமல் அரசர் திகைத்தார். ஏனென்றால், அத்திருடன், எந்தக் குற்றத்தைச் செய்தாலும், அதற்கு ஆதாரம் இருக்காது, சாட்சிகளும். இருக்கமாட்டார்கள். அதனால் அவன், ஊரில், பெரிய மனிதனாக வலம் வந்து கொண்டிருந்தான். அவனுடன் சேர்ந்து ஆதாயங்களை அனுபவிக்க ஒரு கூட்டமும் இருந்தது. அந்த நாட்டிற்கு ஒரு சாது வந்தார். அவரிடம் அத்திருடன் பற்றியும், அரசரின் அமைதி பற்றியும் மக்கள் முறையிட்டனர். உடனே, சாது, ஓலை ஒன்றில் ஏதோ எழுதி, அதை அரசரிடம் கொடுத்தனுப்பினார். அன்று மாலை, திருடனை விருந்திற்கு அழைத்தார் அரசர். விருந்திற்குச் சென்ற திருடன் வீடு திரும்பவில்லை. அன்று இரவே அவன் தூக்கிலிடப்பட்டான். திருடனுடைய ஆதரவாளர்கள் நேராக அரசரிடம் சென்று, திருடனைத் தூக்கிலிட்டதற்கு காரணம் கேட்டனர். அரசர் அமைதியாகப் பதிலளித்தார். 'மக்களே உங்கள் நண்பரை நேற்று விருந்திற்கு அழைத்தேன். அப்போது அவன் அரச இரகசியத்தை திருடிவிட்டான். அதனால் அவன் தூக்கிலிடப்பட்டான் என்றார் அரசர். “அப்படி என்ன பொல்லாத இரகசியம்?” என்று ஆதரவாளர்கள் கேட்டார்கள். அதற்கு அரசர், “அதைத் தெரிந்து கொண்டவர்கள் யாரும் உயிருடன் இருக்க முடியாது. நீங்கள் யாராவது தெரிந்து கொள்ள வேண்டுமா?' என்று கேட்டார். அவ்வளவுதான். அனைவரும் ஓட்டம் பிடித்தனர். இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த அரசி,  அரசே! அதென்ன அரச இரகசியம்? என்று கேட்டார். சாது தனக்கு அனுப்பிய ஓலைச் சுவடியை காண்பித்தார் அரசர். அதில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது.

"நியாயத்தைக் கடைப்பிடித்து, சட்டத்தின் விதிகளையும் மேற்கோள் காட்டி, பிறகு தண்டிக்க வேண்டும் என்பது நியாயத்தின் மீதும், தர்மத்தின் மீதும் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும். அநியாயமாய் நடப்பவர்களுக்கு இது பொருந்தாது. முதலில் அநீதி இழைப்பவர்களுக்குத் தண்டனையைக் கொடுங்கள். பிறகு அதை நியாயப்படுத்தும் விதிகளைத் தேடுங்கள். தண்ணீரில் வாழும் மீன்களுக்கு, தண்டனையை, தண்ணீரிலேயே தேடுவது, அறிவாளி செய்வதல்ல"

இந்த அரச இரகசியத்தின் உண்மை அரசிக்குப் புரிந்தது. இந்தியத் தமிழருக்கும் நிச்சயமாகப்  புரிந்திருக்கும். உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்துவிட்டது. அநீதியாளர்களுக்குத் தண்டனை கிடைத்து விட்டது. இனி அரசியல் குழப்பங்கள் முடிவுக்கு வரும் என்று கணித்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. தமிழகத்தில் நடக்கும் அரசியல் நாடகங்களைப் பார்க்கும்போது, சட்டம் தவறு செய்பவர்களுக்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டிருக்கிறதோ என்று மனம் விம்முகின்றது. இன்று சனநாயகம், அரசியல்வாதிகளுக்கு மட்டும் முழுச் சுதந்திரம் அளித்திருப்பதாகப் புரிந்துகொள்ள முடிகிறது. கூவத்தூர் சொகுசு விடுதியில், அரசியல்வாதிகளுக்குச் செலவழிக்கப்பட்ட ஒரு நாள் தொகை, “மக்களால் நான், மக்களுக்காகவே நான்..” என்று சொன்ன அரசியல் தலைவர் உட்பட, பல தலைவர்களின் சொத்து விபரங்கள், வெளிநாட்டு வங்கி விபரங்கள் இவை பற்றியெல்லாம் கேட்கும்போதே தலை சுற்றுகிறது. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல, தமிழகத்தின் அரசியல் சூழல், மத்திய மற்றும், ஏனைய மாநிலத்தவர்களுக்கு ஆதாயமாக உள்ளது போலவேத் தெரிகிறது. ஒரு கட்சியில் பங்காளிச் சண்டையைத் தூண்டிவிட்டு, தமிழக மக்கள் வேறு பிரச்சனைகள் பக்கம் திரும்பாத நிலை உருவாகியிருப்பதற்கு யார் காரணம்? மண்வளம் காத்தல், நதிநீர் இணைப்பு, காடுகள் வளர்த்தல், சீமை கருவேல மரங்களை முற்றிலும் அழித்தல்...இப்படி, தமிழக மக்களின் அன்றாட வாழ்வாதாரங்களையே கருவறுக்கும் பிரச்சனைகள், இன்று பல உள்ளன. சீமை கருவேல மரத்தின் வேர்ப்பகுதி, பூமியில் நாற்பது அடி ஆழம் வரை சென்று நிலத்தடி நீரை உறிஞ்சி விடுகிறது.

தமிழ்நாடு, விவசாயத்தை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் பூமி. இம்மாநிலத்திற்கு நீராதாரம் வேண்டும். குடிக்கத் தண்ணீர் இல்லாமல், இன்று தமிழகம் முழுவதும் மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். குடிப்பதற்கு மட்டுமில்லாமல், விவசாயத்துக்கே தண்ணீர் இல்லை. இதனால் நிறைய பேர் கூலிக்காரர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், கர்நாடகாவில் மீதமிருக்கும் காவிரி நீரைத்தான் நமக்கு கொடுக்கிறார்கள். முல்லை பெரியாறு நீர்பிடிப்புப் பகுதிகள் எல்லாம், தமிழ்நாட்டில் இருக்கின்றன. ஆனால், அணை கேரளாவில் இருக்கிறது. பத்து அடி தண்ணீர் மேலே ஏற்றுவதற்கு அவர்கள் விடமாட்டேன் என்கிறார்கள். பாலாற்றில் வெறும் மணல்தான் இருக்கிறது. கண்டலேறுவில் குடிதண்ணீருக்குப் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறோம். இதற்கெல்லாம் ஒரேயொரு வழிதான் இருக்கிறது. கங்கை காவிரி இணைப்புதான் அது. கங்கையாற்றிலும், யமுனையாற்றிலும் இருந்து அறுபது விழுக்காடு தண்ணீர் வீணாகப் போகிறது. அந்தத் தண்ணீரை தெற்கு நோக்கி திருப்பி, காவிரி, தாமிரபரணி உள்ளிட்ட எல்லா கிளை நதிகளிலும் தண்ணீரைப் பாய்ந்தோடச் செய்தால், ஆறு, குளம் எல்லாம் நிரம்பி விவசாயம் செழிக்கும். கண்டிப்பாக சுபிட்சமான வாழ்க்கை கிடைக்கும். அதற்கு பலகோடி செலவாகும் என்று சொல்கிறார்கள். பலகோடிகள் செலவழித்து, செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் அனுப்பியிருக்கும் மத்திய அரசு, நதிநீர் இணைப்புக்கும் செலவழிக்கலாமே? (நடிகர் சிவகுமார்).

இவ்வாறு, இப்போதைய தமிழகத்தின் முக்கிய தேவை பற்றி, நடிகர் சிவகுமார் அவர்கள், பேசியிருப்பது, அனைத்துத் தமிழர்களின் குரலாகவே இருக்கின்றது. கடந்த காலம் தெரியாதவர்க்கு நிகழ்காலம் புரியாது. நிகழ்காலம் புரியாதவர்க்கு எதிர்காலம் இல்லை என்ற கூற்று, நம்மை சிந்திக்க வைக்கின்றது. தமிழகம் ஏற்கனவே தண்ணீரின்றி வாடிக்கொண்டிருக்கும் நிலையில், தமிழகத்தை வறட்சிக் காடாக்கும் மற்றொரு நடவடிக்கைக்கும் மத்திய அரசு, கடந்த புதன்கிழமையன்று (பிப்ரவரி 15) அனுமதியளித்துள்ளது. அதுதான் புதுக்கோட்டை உள்ளிட்ட 44 இடங்களில், மீத்தேன் நச்சு வாயு எடுக்கும் திட்டம். மீத்தேன் திட்டம், தற்போது ஹைட்ரோ கார்பன் என்ற மாறுவேடத்தில், துபாயைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்திடம் தாரைவார்க்கப்பட்டுள்ளது. மீத்தேன் என்பதன் வேதியச் சொல்லான, ஹைட்ரோ கார்பன், பெட்ரோல், நிலக்கரியைவிட பெரிய எரிபொருள். இத்திட்டத்தில், நிலத்தில், ஆறாயிரம் அடி ஆழத்திற்குத் துளைபோட்டு, நிலத்திற்கடியிலுள்ள மொத்த நீரையும் வெளியில் எடுப்பார்கள். அப்போது, பூமியின் அத்தனை அடுக்குகளையும் பிளந்து, பூமி பயங்கரமாய் வெடிக்கும். பூமியின் அடி ஆழத்தில் இருக்கின்ற வேதியப் பொருள்களையும், உப்பையும் வெளியே கொட்டும். மண் சுடுகாடாய்ப் போய்விடும். மண் உப்பளமாய் மாறிவிடும். பாரம்பரியக் கோவில்களுக்குச் சேதம் ஏற்படும். இப்படி வாட்சப்பில் ஒருவர் ஆதங்கத்தோடு பேசியிருக்கிறார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மீத்தேன் நச்சுவாயு எடுக்கப் போவதாய்ச் சொன்னார்கள். அது போராட்டத்திற்குப் பின்னர் கைவிடப்பட்டது. இப்போது ஊரையும், எரிபொருளையும் பெயர் மாற்றி அறிவித்துள்ளனர். அணுமின் நிலையங்களால் ஏற்படும் கடும் பாதிப்புகள் குறித்து எடுத்துச் சொல்லி, கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராகப் போராட்டம் நடந்தது. அதில் வெற்றி யாருக்குக் கிட்டியது? நாடு சுதந்திரம் அடைந்து எழுபது ஆண்டுகள் ஆகியும், 28 விழுக்காடு மக்களுக்கு குடி நீர் இல்லை என்பது முக்கிய பிரச்சனை. மாணவர்கள், மீண்டும் அறவழியில் வெகுண்டெழுந்தால், தமிழகத்தை தலைநிமிரச் செய்ய முடியும் என்பது பலரது நம்பிக்கை. இதற்குத் தேவை மனத்துணிவு.

கடந்த கால வரலாற்றை நாம் ஏன் படிக்க வேண்டும்? ஒருநாள், இரயில் நிறுத்தம் ஒன்றில், இருவர் பேசிக்கொண்டதை வைத்து, ஏறியவரில் ஒருவருக்கு கைரேகை பார்க்கத் தெரியும் என்பது பயணிகளுக்கு தெரிந்தது. உடனே அவர் இரயிலில் ஏறியவுடன், ஆளாளுக்கு கைகளைக் காட்டி, பலன் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். அவரும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பலன் சொல்லிக்கொண்டே வந்தார். அவர் இறங்கும் வரை கையைக் காட்டிக்கொண்டுதான் வந்தார்கள். இதன் அடிநாதம் என்னவென்றால், மனிதருக்கு தன் எதிர்காலம் என்னவென்று தெரிந்து கொள்ள இருக்கின்ற ஆர்வம். ஆனால், உண்மையில், மனிதரால் எதிர்காலத்தை அறிந்து கொள்ள முடியுமா? என்பதே நம் கேள்வி. ஆயினும் அதற்கு, கடந்த காலம் தெரிந்திருக்க வேண்டும் என்கிறார்கள். கடந்த காலத்தை பற்றிய அறிவு இல்லாமல், நிகழ்காலத்தை புரிந்துகொள்ள முடியாது. கடந்த கால நிகழ்வுகளை ஆழ்ந்து நோக்கினால், அவை நமக்கு வாழ்க்கைப் பாடங்களை அளிக்கின்றன. அணுமின் நிலையம், தண்ணீர் பிரச்சனை எதுவானாலும், அதன் கடந்தகாலத் தாக்கங்கள் நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். எனவே, நிகழ்காலத்தைப் புரிந்துகொள்வதற்கு, கடந்த காலம் தெரிந்திருப்பது நல்லது.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.