சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

வார ஒலிபரப்பு \ முதல் நிமிடம்

பாசமுள்ள பார்வையில்... இளம்பெண் விட்டுச்சென்ற பாடம்

வயது முதிர்ந்த அன்னை - RV

21/02/2017 15:09

இளம்பெண் ஒருவர், வயதான தன் தாயை அழைத்துக்கொண்டு, ஓர் உணவகத்திற்குச் சென்றார். அவர்கள் கேட்ட உணவு பரிமாறப்பட்டது. வயதான தாய், தளர்ந்த நிலையில் இருந்ததால், அவர் உண்ணும்போது, உணவை, தன் உடையின் மீது சிந்திக்கொண்டிருந்தார். உணவகத்திலிருந்த ஏனையோர், வயதான அந்தத் தாயை அருவருப்புடன் பார்த்தனர். அவருடைய மகளோ, சிறிதும் கவலைப்படாமல், தன் தாயுடன் பேசி, சிரித்துக்கொண்டிருந்தார்.

உணவு முடிந்தபின், அந்த இளம்பெண், தன் அம்மாவை அங்கிருந்த கழிவறைக்கு அழைத்துச் சென்றார். அங்கு, தன் அன்னையின் உடையில் சிந்தியிருந்த உணவுத் துகள்களையெல்லாம் அகற்றினார். அன்னையின் முகத்தை நீரால் கழுவி, துடைத்து, அவரது தலைமுடியையும் சீராக்கினார். அவர்கள் இருவரும் கழிவறையை விட்டு வெளியே வந்தபோது, வயதான அந்தத் தாயிடம் காணப்பட்ட அழகும், கம்பீரமும் அங்கிருந்தோரை வியக்கவைத்தன.

உணவுக்குரிய தொகையை செலுத்திவிட்டு, இருவரும் கிளம்பிய வேளையில், உணவகத்திலிருந்த வயதான ஒருவர், "நீங்கள் ஏதோ ஒன்றை விட்டுச்செல்கிறீர்களே!" என்று சொன்னார்.

அந்த இளம்பெண், தாங்கள் அமர்ந்திருந்த மேசையைப் பார்த்துவிட்டு, "நாங்கள் எதையும் விட்டுச்செல்லவில்லையே!" என்று பதில் சொன்னார்.

வயதான அந்த மனிதர் எழுந்து நின்று, "இல்லை மகளே, இங்கிருக்கும் ஒவ்வொரு மகனுக்கும், மகளுக்கும், நல்லதொரு பாடத்தையும், இங்கிருக்கும் வயதான பெற்றோருக்கு, நம்பிக்கையையும், நீ விட்டுச்செல்கிறாய்!" என்று சப்தமாகக் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

21/02/2017 15:09