2017-02-21 15:26:00

ஆயுத இறக்குமதியில் இந்தியா, ஏற்றுமதியில் அமெரிக்கா முதலிடம்


பிப்.21,2017. 2012க்கும், 2016ம் ஆண்டுக்கும் இடைப்பட்டக் காலத்தில், உலகிலேயே ஆயதங்களை அதிகமாக வாங்கிய நாடாக இந்தியா குறிக்கப்பட்டுள்ளது.

ஆயுதங்களை அதிகமாக இறக்குமதி செய்த நாடுகளுள், முதல் இடத்தை இந்தியாவும், இரண்டாம் இடத்தை சவுதி அரேபியாவும் பெற்றுள்ள நிலையில், அதிக ஆயுதங்களை விற்றவர் பட்டியலில், அமெரிக்க ஐக்கிய நாடும், இரஷ்யாவும், சீனாவும், பிரான்சும், ஜெர்மனியும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

ஆசிய பசிபிக் பகுதியைச் சேர்ந்த நாடுகள், உலக ஆயுத இறக்குமதியில் 43 விழுக்காட்டைக் கொண்டிருந்ததாகவும், புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

மத்தியக்கிழக்குப் பகுதியில் எரிசக்தி எண்ணையின் விலை குறைந்துள்ளபோதிலும், ஆயுதங்களை வாங்குவது அதிகரித்துள்ளதாகக் கூறும் உலக இராணுவச் செலவுகள் குறித்து ஆய்வு நடத்தும், SIPRI அமைப்பின் வல்லுனர் Pieter Wezeman அவர்கள், மத்தியக் கிழக்குப் பகுதியின் பதட்ட நிலைகளையும் மோதல்களையும் சமாளிக்க ஆயுத இறக்குமதியே ஒரே வழி என அவர்கள் நம்புவதாகவும் கூறினார்.

உலகிலேயே ஆயுத இறக்குமதியில் 13 விழுக்காட்டை தன் பங்காகக் கொண்டு முதலிடத்தை வகிக்கும் இந்தியா, ஆயுதத்திற்கு என, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளைவிட அதிகம் செலவழிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே அதிக அளவில் ஆயுத ஏற்றுமதி செய்யும் நாடாக விளங்கும் அமெரிக்க ஐக்கிய நாடு, ஏறக்குறைய நூறு நாடுகளுக்கு ஆயுதங்களை விற்று வருகிறது, குறிப்பாக, மத்திய கிழக்குப்பகுதியின் நாடுகளுக்கு.

ஆதாரம்: AsiaNews/SIPRI/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.