2017-02-21 14:39:00

திருத்தந்தை : புலம்பெயர்வோரைக் காப்பது நன்னெறிக் கடமை


பிப்.21,2017. எக்காலத்தையும்விட இக்காலத்தில், பெருமளவான மக்கள் ஒரு கண்டத்திலிருந்து அடுத்த கண்டத்திற்கு குடிபெயர்ந்து வருவது, அரசியல், பொது சமூகம் மற்றும் திருஅவைக்கு, சவால்களை அதிகரித்து வருகின்றது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கூறினார்.

குடிபெயர்தலும், அமைதியும் என்ற தலைப்பில், உரோம் நகரில் நடைபெறும் பன்னாட்டு கருத்தரங்கில் கலந்துகொள்ளும் ஏறக்குறைய 250 பிரதிநிதிகளை, இச்செவ்வாயன்று திருப்பீடத்தின் கிளமெந்தினா அறையில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, குடியேற்றம் மற்றும் அமைதியை ஊக்குவிப்பதற்கு முன்வைக்கப்படும் சவால்களுக்கு, வளர்ச்சியும், ஒருங்கிணைப்பும் இன்றி, பதில் காண இயலாது என்று கூறினார்.

வரவேற்றல், பாதுகாத்தல், ஊக்குவித்தல், ஒருங்கிணைத்தல் ஆகிய நான்கு தலைப்புகளில் பேச விரும்புவதாகத் தெரிவித்த திருத்தந்தை, பல்வேறு காரணங்களுக்காக, தங்களின் சொந்த இடங்களைவிட்டு கட்டாயமாக வெளியேறும் நம் சகோதர, சகோதரிகளுக்கு, பாதுகாப்பு அளித்தால் மட்டும் போதாது, அவர்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு உதவிகள் வழங்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

இப்பூமியின் பலன்கள் எல்லாருக்கும் கிடைப்பதற்கு, வழிகளை நாம் கண்டறிய வேண்டும் எனவும், உலகளாவிய மனித உரிமைகள் அறிக்கையின்படி, புலம்பெயர்வோர் மற்றும், குடிபெயர்வோர் வரவேற்கப்பட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அடக்குமுறை, உரிமை மீறல்கள், வன்முறை மற்றும் மரணத்திற்கு அஞ்சி, புலம்பெயரும் மக்களுடன் ஒருமைப்பாட்டுணர்வு காட்டப்பட வேண்டியது நம் கடமை எனவும் கூறியத் திருத்தந்தை, தங்களின் தாயகம் மற்றும் குடும்பங்களைவிட்டு, கட்டாயமாக வெளியேறி வாழ்கின்ற, சிறார் மற்றும் வளர்இளம்பருவத்தினருக்குச் சிறப்பு கவனம் செலுத்துப்படுமாறும் பரிந்துரைத்தார்.

மேலும், இச்சந்திப்பில் முதலில் திருத்தந்தைக்கு நன்றி தெரிவித்துப் பேசிய, திருப்பீட ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் துறையின் செயலர் பிரதிநிதி, பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள், புலம்பெயர்ந்தோர் குறித்து மாமன்றம் ஒன்றை நடத்துமாறு பரிந்துரைத்தார்.

திருப்பீட ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் துறை, Scalabrini துறவு சபையின் உலகளாவிய குடியேற்றதாரர் அமைப்போடு இணைந்து நடத்தும் இக்கூட்டம், இப்புதனன்று நிறைவடையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.