2017-02-22 16:14:00

"அகில உலக அமைதி மற்றும் பாதுகாப்பு: ஐரோப்பாவில் மோதல்கள்"


பிப்.22,2017. உலகின் பல பகுதிகளில் நிகழ்ந்துவரும் போர்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களோடும் திருப்பீடம் தன் ஒருமைப்பாட்டையும், அருகாமையையும் உறுதி செய்ய விழைகிறது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஓர் உலக அரங்கில் உரையாற்றுகையில் கூறினார்.

நியூ யார்க் நகரில் இயங்கிவரும் ஐ.நா. தலைமைச் செயலகத்தின் கூட்டங்களில், திருப்பீடத்தின் சார்பில் பங்கேற்கும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், ஐ.நா. பாதுகாப்பு அவை, இச்செவ்வாயன்று மேற்கொண்ட ஒரு கூட்டத்தில் இவ்வாறு உரையாற்றினார்.

"அகில உலக அமைதி மற்றும் பாதுகாப்பு: ஐரோப்பாவில் மோதல்கள்" என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பேசிய பேராயர் அவுசா அவர்கள், அகில உலக அமைதி, மற்றும் பாதுகாப்பு முயற்சிகள், மனித உயிர்களைக் காப்பதற்கும், துயரங்களைத் துடைப்பதற்கும் முன்னுரிமை தரவேண்டும் என்று தன் உரையில் வலியுறுத்தினார்.

2014ம் ஆண்டு முதல் நிகழ்ந்துவரும் உக்ரைன் மோதல்களை, தன் உரையில் குறிப்பிட்டுப் பேசிய பேராயர் அவுசா அவர்கள், அனைத்து தரப்பினரும் உண்மையான முயற்சிகளை மேற்கொள்வது மட்டுமே, மோதல்களைத் தீர்ப்பதற்கு ஒரே வழி என்று சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.