2017-02-22 16:12:00

குடியேற்றத்தார் குறித்த அரசாணைகள், குடும்பங்களைச் சிதைக்கும்


பிப்.22,2017. அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் டொனால்டு டிரம்ப் அவர்கள், குடியேற்றத்தார் குறித்து வெளியிட்டுள்ள அரசாணைகள், பல்லாயிரம் குடும்பங்களில், பாதுகாப்பின்மை, எதிர்காலம் பற்றிய உறுதியற்ற நிலை போன்ற துன்பங்களை விளைவித்துள்ளன என்று, மெக்சிகோ உயர் மறைமாவட்டம் கூறியுள்ளது.

தகுந்த ஆவணங்கள் இன்றி, அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழ்வோர், சிறு குற்றங்களின் அடிப்படையிலும் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவர் என்று அரசுத்தலைவர் அறிவித்திருப்பது, பல்லாயிரம் குடும்பங்களின் பெற்றோர்களை நாட்டைவிட்டு வெளியேற்றி, அவர்களின் குழந்தைகளை பாதுகாப்பின்றி விட்டுவிடும் நிலையை உருவாக்கியுள்ளது என்று, மெக்சிகோ உயர் மறைமாவட்டம் வெளியிடும் "Desde la Fe" என்ற இதழில் கூறப்பட்டுள்ளது.

இத்தகையைச் சூழலில், குடிபெயர்ந்தோர் குடும்பங்களுக்குத் தேவையான பாதுகாப்பு, சட்ட ஆலோசனை மற்றும் நிதி உதவிகள் அனைத்தையும் செய்வதற்கு, அமெரிக்க, மெக்சிகோ எல்லையில் அமைந்துள்ள இருநாட்டு ஆயர்களின் இணைந்த அறிக்கையொன்று அழைப்பு விடுக்கிறதென்று பீதேஸ் செய்திக்குறிப்பு கூறுகிறது.

தற்போது நடைபெற்றுவரும் கடுமையான ஆட்சியின் பின்னணியில், மக்களுக்கு சமுதாய, அரசியல், சட்ட வழிகளில் அனைத்து உதவிகளையும் வழங்குவது கத்தோலிக்க கடமை என்று ஆயர்கள் கூறியுள்ளனர்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.