2017-02-23 15:42:00

தவக்காலத்தில், மும்பை கத்தோலிக்கர்களின் 'கார்பன் நோன்பு'


பிப்.23,2017. நெருங்கிவரும் தவக்காலத்தில், மும்பை கத்தோலிக்கர்கள், 'கார்பன் நோன்பை'க் கடைபிடிக்குமாறு, உயர் மறைமாவட்ட துணை ஆயர், ஆல்வின் டி'சில்வா (Allwyn D’Silva) அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.                  

மறைமாவட்டத்தைச் சார்ந்த, 100க்கும் அதிகமான பங்குகளில் வாழும் 5 இலட்சத்திற்கும் அதிகமான கத்தோலிக்கர்கள், வெப்பமடையும் பூமிக்கோளத்தை மனதில் கொண்டு, தங்கள் வாழ்வு முறையை மாற்றியமைக்க, தவக்காலத்தில் முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்று ஆயர் டி'சில்வா அவர்கள் விண்ணப்பித்துள்ளார்.

மழை நீரைச் சேமிப்பது, சூரிய ஒளியிலிருந்து மின்சக்தியை உருவாக்குவது, மின்சக்தி, எரிபொருள் சக்தி ஆகியவற்றை பொறுப்புடன் பயன்படுத்துவது என்று ஒவ்வொரு பங்கு மக்களும் முடிவுகளை எடுத்து, பின்பற்றுமாறு, மும்பை உயர்மறைமாவட்ட சுற்றுச்சூழல் பணிக்குழுவின் தலைவர், ஆயர் டி'சில்வா அவர்கள் பரிந்துரைகள் வழங்கியுள்ளார்.

தொலைக்காட்சி பார்க்காத ஒருநாள், பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தாமை என்று பல வழிகளில், 'கார்பன் நோன்பை'க் கடைபிடிக்க முடியும் என்று ஆயர் டி'சில்வா அவர்கள் ஆலோசனைகள் கூறியுள்ளார். 

ஆதாரம் : Hindustan Times / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.