2017-02-23 15:33:00

திருத்தந்தை: மனமாற்றம் பெறுவதைத் தள்ளிப்போட வேண்டாம்


பிப்.23,2017. இரட்டைவேட வாழ்வால், சிறியோருக்கு இடறலாக இருப்பதைத் தவிர்க்கவும், மனமாற்றம் பெறுவதைத் தள்ளிப்போடாமல் இருக்கவும், வேண்டுமென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறையுரை வழியே இவ்வியாழனன்று விண்ணப்பித்தார்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றியத் திருத்தந்தை, பாவத்தில் விழச் செய்யும் கை, கால், கண் ஆகியவற்றை அகற்றுவது மேல் என்று கூறும் மாற்கு நற்செய்திப் பகுதியை தன் மறையுரையின் மையமாக்கினார்.

உள்ளொன்றும் புறமொன்றுமாக இரட்டைவேடமிடும் வாழ்வால், மற்றவருக்கு, குறிப்பாக, சிறியோருக்கு நாம் இடறலாக இருக்கிறோம் என்று தன் மறையுரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, நமது இரட்டைவேட வாழ்வைக் காணும் பிறர், 'இப்படியொரு கத்தோலிக்கராக வாழ்வதற்குப் பதில், கடவுள் நம்பிக்கையற்றவராக வாழலாம்' என்று கூறுவது, அவர்களுக்கு நாம் தரும் மிகப் பெரும் இடறல் என்று கூறினார்.

ஒரு நிறுவனத்தில் தங்கள் மாத ஊதியத்திற்காக தொழிலாளர்கள் போராடிவந்த வேளையில், அந்நிறுவனத்தை நடத்திய ஒரு கத்தோலிக்க முதலாளி, மிக அதிகச் செலவில் தன் கோடை விடுமுறையைச் செலவழிப்பது, உண்மையிலேயே மிகப்பெரும் இடறல் என்று, ஓர் எடுத்துக்காட்டையும் தன் மறையுரையில் எடுத்துரைத்தார், திருத்தந்தை.

அனைவரின் வாழ்விலும் மனமாற்றம் அவசியம் என்று கூறியத் திருத்தந்தை, இந்த மனமாற்றத்தின் தேவையை உணர்ந்ததும், அதை செயல்படுத்த வேண்டும் என்றும், நாளை மாறலாம் என்று தாமதிப்பது தவறு என்றும் திருத்தந்தை தன் மறையுரையில் வலியுறுத்திக் கூறினார்.

மேலும், "எடுத்துக்காட்டான வாழ்வின் தாக்கத்தை, குறைத்து மதிப்பிடவேண்டாம். அது ஆயிரம் சொற்களையும், 'விரும்புகிறேன்' என்று ஆயிரம் முறை சமூகத் தளத்தில் பதிவு செய்வதையும், யூடியூப் வழியே மறுபதிவு செய்வதையும்விட மதிப்பு மிக்கது" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக இவ்வியாழன் வெளியாயின.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.