2017-02-24 16:06:00

முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயுவின் தவக்கால செய்தி


பிப்.24,2017. தெளிந்த மனநிலையை உருவாக்கவும், மனமாற்றம் அடையவும், ஆர்த்தடாக்ஸ் தனித்துவத்தை வெளிப்படுத்தவும் ஏற்ற காலம் தவக்காலம் என்று, கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயு அவர்கள் கூறியுள்ளார்.

கான்ஸ்டான்டிநோபிள் ஆர்த்தடாக்ஸ் சபையின் தவக்காலத்திற்கென செய்தி வெளியிட்டுள்ள முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு அவர்கள், மனச்சான்று கடவுளின் கொடை எனவும், தவக்காலத்தில், மனச்சான்று குறித்து பரிசோதனை செய்ய வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாம் யார், எங்கிருந்து வந்தோம், எங்கே செல்கிறோம் என்பது பற்றியும், நிலையில்லா இவ்வுலக வாழ்வின் மாயத்தோற்றம் பற்றியும் சிந்தித்துப் பார்க்குமாறு அழைப்பு விடுத்துள்ள முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு அவர்கள், கிறிஸ்துவோடு, கிறிஸ்துவுக்காக வாழ்வதற்கு, ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு அவர்களின் இத்தவக்கால செய்தி, அச்சபையின் அனைத்து ஆலயங்களிலும், பிப்ரவரி 26, இஞ்ஞாயிறன்று வாசிக்கப்படும்.

ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையில், பிப்ரவரி 27ம் தேதி தொடங்கும் தவக்காலம், ஏப்ரல் 7ம் தேதி நிறைவடைகின்றது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.