2017-02-25 15:50:00

Al Azhar, திருப்பீடம் பயங்கரவாதத்திற்கு எதிராக இணைந்திட


பிப்.25,2017. பயங்கரவாதத்திற்கு எதிராக, இணைந்து செயலாற்ற, திருப்பீட பல்சமய உரையாடல் அவையும், எகிப்தின் Al Azhar Al-Sharif இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் உரையாடல் மையமும் தீர்மானித்துள்ளன.

திருப்பீட பல்சமய உரையாடல் அவையும், Al-Azhar இஸ்லாமியப் பல்கலைக்கழகமும் இணைந்து, எகிப்து தலைநகர் கெய்ரோவில், இப்புதன், வியாழன் தினங்களில் (பிப்ரவரி 22, 23) நடத்திய கூட்டத்தில், இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்திற்கு அடிப்படை காரணங்களாகிய, வறுமை, வன்முறை போன்றவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும், மத வழிபாடுகள் மதிக்கப்பட்டு, பாதுகாக்கப்படுவதற்கும், இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் அழைப்பு விடுத்தனர்.

மதத்தின் பெயரில் நடைபெறும், சமயத் தீவிரவாதம், பயங்கரவாதம் மற்றும், வன்முறைக் கூறுகளுக்கு அடிப்படை காரணங்கள், இவற்றுக்கு எதிராகச் செயல்படுவதில், திருப்பீடத்திற்கும், Al-Azhar பல்கலைக்கழகத்திற்கும் இருக்கின்ற பங்கு போன்றவை இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டன.

இதில், திருப்பீடத்தின் சார்பில், திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran, அவ்வவையின் செயலர் ஆயர் Miguel Ángel Ayuso Guixot, அவ்வவையின் இஸ்லாம் அலுவலக இயக்குனர் பேரருள்திரு Khaled Akasheh, எகிப்து திருப்பீடத் தூதர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கும், Al-Azhar பல்கலைக்கழகத் தலைவர் பேராசிரியர் Ahmad Al-Tayyib அவர்களுக்கும் இடையே, 2016ம் ஆண்டு மே 23ம் தேதி நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்புக்குப் பின்னர், திருப்பீட பல்சமய உரையாடல் அவை, கெய்ரோவில் பலமுறை இத்தகைய கூட்டங்களை நடத்தியுள்ளது. 

இரண்டாயிரமாம் ஆண்டில், புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களும், Al-Azhar மையம் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.