2017-02-25 15:48:00

தண்ணீர் தொடர்புடைய நோய்களால் தினமும் ஆயிரம் சிறார் மரணம்


பிப்.25,2017. தண்ணீர் தொடர்புடைய நோய்களால், ஒவ்வொரு நாளும் ஆயிரம் சிறார் வீதம் இறக்கின்றவேளை, இலட்சக்கணக்கான மக்கள், மாசடைந்த தண்ணீரைக் குடித்து வருகின்றனர் என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

ஐக்கிய நாடுகள் நிறுவனம் வெளியிட்டுள்ள இப்புள்ளி விபரங்கள் பற்றி அறியும்போது, தண்ணீர் தொடர்புடைய பிரச்சனைகள் பற்றி நாம் செயல்படாமல் இருக்க முடியாது என்றும், இந்நிலையை மாற்றுவதற்கு, நாம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தப்படுகின்றோம் என்றும் கூறினார், திருத்தந்தை.

தண்ணீரைப் பெறுவதற்கு ஒவ்வொருவருக்கும் உள்ள உரிமை என்ற தலைப்பில், வத்திக்கானில் நடந்த, ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கில் கலந்துகொண்ட பிரதிநிதிகளை, இவ்வெள்ளி மாலையில் சந்தித்து உரையாற்றியபோது, இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இக்கருத்தரங்கில் விவாதிக்கப்பட்ட இத்தலைப்பு, மிகவும் அடிப்படையானது மற்றும், நம்மை உடனடியாகச் செயலில் இறங்கத் தூண்டுகின்றது எனவும் கூறியத் திருத்தந்தை, பாதுகாப்பான, சுத்தமான குடிநீரைக் கொண்டிருப்பது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை என்பதையும் வலியுறுத்திப் பேசினார்.

மேலும், தண்ணீரின் பாதுகாப்பை ஊக்குவித்து, அது உலகினர் எல்லாருக்கும் கிடைக்குமாறு செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, பன்னாட்டு வல்லுனர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது திருப்பீடம்.

திருப்பீட அறிவியல் கழகமும், அர்ஜென்டீனாவை மையமாகக் கொண்டுள்ள உரையாடல் மற்றும், கலாச்சார சந்திப்பு மையமும் இணைந்து, பிப்ரவரி 23, 24 தேதிகளில், இக்கருத்தரங்கை நடத்தின.

இதில், ஐந்து கண்டங்களைச் சேர்ந்த, கொள்கை அமைப்பாளர்கள், அரசு அதிகாரிகள், மதத் தலைவர்கள், முன்னேற்றம் மற்றும் சமூக நீதி ஆர்வலர்கள் என, 90க்கும் மேற்பட்ட வல்லுனர்கள் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.