2017-02-25 15:29:00

பங்குத்தந்தையரே, திருமணமான தம்பதியர்க்கு ஆதரவு காட்டுங்கள்


பிப்.25,2017. ரோமன் ரோட்டா என்ற, திருமணம் சார்ந்த திருஅவையின் உச்ச நீதிமன்றம் நடத்தும் பயிற்சிப் பாசறையில் கலந்துகொள்ளும் பங்குத்தள அருள்பணியாளர்களை, இச்சனிக்கிழமையன்று, திருப்பீடத்தின் கிளமெந்தினா அறையில், சந்தித்து உரையாற்றிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருமணத் தயாரிப்பில் பங்கு அருள்பணியாளர்களின் பணிகள் பற்றிப் பேசினார்.

திருமணத் தயாரிப்பிலும், திருமணக் கொண்டாட்டத்திலும், திருமணத்திற்குப் பின்னர் தம்பதியரின் தொடர் பயணத்திலும் பங்குத்தள அருள்பணியாளர்கள் ஆற்ற வேண்டிய பணிகளைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, இப்பணியில் இடர்களை எதிர்கொண்டாலும், தொடர்ந்து செயலாற்ற ஊக்கப்படுத்தினார்.

திருமணம் புரிந்து, புதிய குடும்பத்தை அமைத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கும் இளையோரை முதலில் சந்திப்பது, பங்குத்தந்தையரே என்றும், திருமணம் பிரச்சனையில் இருக்கும்போதும், திருமண அருளடையாளத்தின் அருளை மீண்டும் கண்டுகொள்ளத் தேவை ஏற்படும்போதும், தம்பதியர் முதலில் சந்திப்பது பங்குத்தந்தையையே என்றும் திருத்தந்தை கூறினார்.

முறிவடைந்த திருமணங்கள், அரசில் பதிவுசெய்யப்படும் திருமணங்கள், கிறிஸ்தவத் திருமணங்கள், மகிழ்வாய் அல்லது மகிழ்வற்று வாழும் குடும்பங்கள், இளையோர் என, திருமணத்தில் காணப்படும் சிக்கலான மற்றும், பல்வேறு பிரச்சனைகளை, பங்குத்தந்தையரைவிட வேறு எவரும் நன்றாக அறிய முடியாது என்றும், திருத்தந்தை கூறினார்.

ஒவ்வொரு சூழலிலும், ஒவ்வொரு மனிதரோடும், தொடர்ந்து பயணம் செய்து, அவர்களுக்கு ஆதரவாக இருந்து, சான்று பகருமாறும், பங்குத்தந்தையரிடம் கூறினார், திருத்தந்தை.

திருமணம் புரிந்துகொள்ளாமலே சேர்ந்து வாழ்கின்ற இளம் தம்பதியர், ஆன்மீக மற்றும் அறநெறி முறையில் ஏழைகளாக உள்ளனர் எனவும், நம் ஆண்டவரும், போதகருமானவரின் வழியைப் பின்பற்றி, இவர்களுக்குத் திருஅவை அன்னையாக இருந்து, இவர்கள் மீது அக்கறை காட்டுமாறும் கூறினார், திருத்தந்தை.

பங்குத்தளம் கிறிஸ்துவின் பிரசன்னமாக, அவரின் மீட்புப்பணியை முழுமையாக நிறைவேற்றுவதாக உள்ளது என்றும், பங்குத்தளம், நற்செய்தியின், உண்மையின், மற்றும், நம் ஆண்டவரின் இல்லம் என்றும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ். 

திருமணம் எனும் அருளடையாளத்தில், கடவுள் தம் சாயலையும் அன்பையும் பதிக்கிறார் என்பதை, கிறிஸ்தவத் தம்பதியர் எப்போதும் நினைவில் கொள்வதற்கு, பங்குத்தந்தையர் உதவுமாறும் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருமண முறிவு மற்றும், திருமணம் சார்ந்த சட்டரீதியான அணுகுமுறைகள் குறித்து, ரோமன் ரோட்டாவில், இப்பயிற்சி நடைபெற்று வருகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.