2017-02-25 15:27:00

பொதுக்காலம் 8ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


மனநல மருத்துவரான James T.Fisher என்பவர், எழுதிய ஒரு நூலின் பெயர், A Few Buttons Missing, அதாவது, "ஒரு சில பொத்தான்களைக் காணோம்". கவலைகளாலும், மன  அழுத்தங்களாலும் பாதிக்கப்பட்டோரின் பகிர்வுகளிலிருந்து, தான் புரிந்துகொண்ட உண்மைகளை, Fisher அவர்கள், இந்நூலில் பதிவு செய்துள்ளார். நூலின் இறுதி பக்கங்களில், தான் வாழ்வில் கற்றுக்கொண்ட சில பாடங்களைத் தொகுத்து வழங்கியுள்ளார். அப்பாடங்களில் ஒன்று, இயேசுவின் மலைப்பொழிவைப் பற்றியது: "உலகின் புகழ்பெற்ற மனநல மருத்துவர்கள், அறிஞர்கள் கூறியுள்ள அனைத்து கருத்துக்களையும் ஒன்று திரட்டுவோம். அவற்றில் உள்ள தேவையற்ற வார்த்தைகளையெல்லாம் அகற்றிவிடுவோம். மனநலம் பற்றி, ஆடம்பரமற்ற, கலப்படமற்ற உண்மைகளை எல்லாம் திரட்டினால், அவற்றில் இயேசு போதித்த மலைப்பொழிவின் சில பகுதிகளையாவது காணலாம். கடந்த ஈராயிரம் ஆண்டுகளாக இவ்வுலகம், வீணாகச் சுமந்து திரியும் கவலைகளுக்கும், ஏக்கங்களுக்கும், மலைப்பொழிவில், முழுமையான தீர்வுகள் உள்ளன" என்று Fisher அவர்கள் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் 33வது அரசுத் தலைவராக இருந்த Harry Truman அவர்கள், "மலைப்பொழிவு தரும் பாடங்களைப் பயன்படுத்தினால், தீர்க்கமுடியாத பிரச்சனைகள் என்று, அமெரிக்க ஐக்கிய நாட்டிலோ, உலகிலோ எதுவும் இருக்கமுடியாது" என்று கூறியுள்ளார். கிறிஸ்தவம், சமயம் என்ற எல்லைகளைக் கடந்து, தலைவர்களையும், அறிஞர்களையும் கவர்ந்துள்ள மலைப்பொழிவின் கருத்துக்களை, கடந்த நான்கு ஞாயிற்றுக் கிழமைகள் சிந்தித்துவந்த நாம், இன்று, இறுதி முறையாக, சிந்திக்க வந்திருக்கிறோம். மலைப்பொழிவு, நமக்குக் கற்றுத்தரும் பாடங்கள், வருகிற புதனன்று நாம் துவங்கவிருக்கும் தவக்காலத்திற்குத் தகுந்ததொரு தயாரிப்பாக அமையும் என்ற நம்பிக்கையுடன், நம் சிந்தனைகளைத் தொடர்வோம்.

இன்றைய நற்செய்தியில், இயேசு, நமக்கு, மூன்று அறிவுரைகளைத் தருகிறார்:

நீங்கள் கடவுளுக்கும், செல்வத்திற்கும் பணிவிடை செய்யமுடியாது.

எதை உண்போம்? எதைக் குடிப்போம்? எதை அணிவோம்? என, கவலை கொள்ளாதீர்கள்.

நாளைக்காகக் கவலைப்படாதீர்கள்... அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்.

"எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்யமுடியாது". இன்றைய நற்செய்தியின் ஆரம்ப வரிகளில், இயேசு விடுக்கும் இச்சவால், உண்மையான பணியாளர்களை மனதில் வைத்து, விடுக்கப்பட்ட சவால். நாளுக்கொரு முகமூடியை அணியும் அரசியல் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும், இயேசு கூறும் வார்த்தைகள், அர்த்தமற்றதாகத் தெரியும். பணம் தந்தால், 'இரு தலைவர்கள்' என்ன, 'ஈராயிரம் தலைவர்களுக்கும்' தங்களால் பணிவிடை செய்யமுடியும் என்பதை, நம் அரசியல்வாதிகள், இயேசுவுக்குச் சொல்லித்தர முற்பட்டாலும், ஆச்சரியமில்லை.

இச்சவாலைத் தொடர்ந்து, இயேசு விடுக்கும் அடுத்த எச்சரிக்கை: "கடவுளுக்கும், செல்வத்திற்கும் பணிவிடை செய்யமுடியாது". இந்த எச்சரிக்கையைக் கேட்கும் அரசியல் தலைவர்களும், தொண்டர்களும், உள்ளூர ஏளனமாய்ச் சிரித்துக்கொள்வார்கள். அவர்கள் சிரிப்பதற்குக் காரணம், இதுதான்... “கடவுளுக்கும், செல்வத்திற்கும் பணிவிடை செய்யமுடியாது என்று யார் சொன்னது? நாங்கள் கடவுளுக்கும், செல்வத்திற்கும் பணிவிடை செய்கிறோம். ஏனெனில் எங்கள் கடவுளே, செல்வம்தான்” என்று சொல்பவர்கள் இவர்கள்.

"கடவுளுக்கும், செல்வத்திற்கும் பணிவிடை செய்யமுடியாது" என்று இயேசு சொல்வது, செல்வத்திற்கு எதிராக, செல்வத்தைக் கண்டனம் செய்து, சொல்லப்பட்ட கூற்றாகத் தோன்றலாம். செல்வம் சேர்ப்பது, செல்வத்தைப் பகிர்வது, இவற்றை, இயேசு குறை கூறவில்லை. செல்வத்திற்குப் பணிவிடை செய்வதையே அவர் தவறு என்று எச்சரிக்கிறார். செல்வம், நமக்குப் பணிவிடை செய்யவேண்டும். அதற்கு மாறாக, உயிரற்ற செல்வத்திற்கு, உயிரும், அறிவும் கொண்ட நாம் பணிவிடை செய்வது தவறு என்று, இயேசு எச்சரிக்கிறார்.

இன்றைய நற்செய்தியில் இயேசு கூறும் அடுத்த அறிவுரை: எதை உண்போம்? எதைக் குடிப்போம்? எதை அணிவோம்? என, கவலை கொள்ளாதீர்கள்.

இந்த அறிவுரையைப் பற்றி அழுத்திப் பேச எனக்குச் சிறிது தயக்கம், பயம். என் உடன்பிறந்தோர், உறவினர், நண்பர்கள் மத்தியில் அவ்வப்போது நான் இந்த அறிவுரையை நினைவுறுத்தியிருக்கிறேன். அவர்களில் பலர் எனக்குத் தந்த பதில் இதுதான்: "சாமி, உங்களுக்கென்ன, புள்ளயா, குட்டியா, கவலைப்படுவதற்கு? கவலைப்படவேண்டாம்னு நீங்க சுலபமா சொல்லிடுவீங்க. ஆனா, எங்க நிலைல இருந்தீங்கனாத் தெரியும்" என்பது, அவர்களின் வாதம். குடும்ப பாரம் என்றால் என்ன என்பதை, அனுபவப்பூர்வமாக அறிந்தவன் நானல்ல, ஏற்றுக்கொள்கிறேன். குடும்ப பாரங்களைச் சுமப்பவர்களின் கவலைகள், ஒவ்வொரு நாளும் அதிகமாகிக்கொண்டே வருகின்றன. உண்மைதான். ஆனால், கவலைகளின் சுமைகளால், நமது உள்ளங்கள் நொறுங்கிப் போகாமல் காக்கும் வழிகளை முயன்று பார்க்க, இஞ்ஞாயிறு, நமக்கு வாய்ப்பளிக்கிறது.

கடவுளையும், செல்வத்தையும், இன்றைய நற்செய்தியின் முதல் பகுதியில் இணைத்துப் பேசிய இயேசு, கடவுளையும், கவலைகளையும் இரண்டாம் பகுதியில் இணைத்துப் பேசுகிறார். செல்வத்தைக் கடவுளுக்கு இணையாக வைத்து வழிபடுவதும், பணிவிடை செய்வதும் தவறு என்று கூறும் இயேசு, கடவுளை நம் கண்களிலிருந்து மறைக்கும் அளவு, நம்மை நாமே, கவலைகளில் மூழ்கடித்துக்கொள்வது பற்றியும் எச்சரிக்கிறார். சிறு, சிறுத் துளிகளாய் சேரும் கவலைகளைத் தீர்க்கும் வழிகளைச் சிந்திக்காமலிருந்தால், விரைவில், அவை, கடலாக மாறி, நம்மை மூழ்கடிக்கும்.

Erma Louise Bembeck என்ற எழுத்தாளர், 1960களில் அமெரிக்க நகர வாழ்வைப்பற்றி, சிறு பகுதிகளாக நாளிதழ்களில் எழுதிவந்தார். நகைச்சுவையோடு ஆழ்ந்த கருத்துக்களை இணைத்து இவர் சொன்ன எண்ணங்கள், 15 புத்தகங்களாய் வெளிவந்துள்ளன. புதிதாகச் சேர்ந்துள்ள பள்ளிக்குச் செல்ல பயந்த Donald என்ற சிறுவனைப்பற்றி Erma அவர்கள் எழுதிய ஒரு சிறு பகுதி இது: "என் பெயர் டொனால்டு. என்னுடைய ஒரு பல் ஆடிக்கொண்டிருக்கிறது. நான் இதைப்பற்றி அதிகம் கவலைப்பட்டதால், இரவு சரியாகத் தூங்க முடியவில்லை. நாளை நான் செல்லவிருக்கும் புதிய பள்ளியின் உணவகத்தில், நாற்காலிகள் அதிக உயரமாய் இருந்தால், நான் எப்படி அதில் ஏறி அமரமுடியும்? நான் பள்ளியில் முகம் கழுவும்போது, என் சட்டையில் குத்தப்பட்டுள்ள அட்டையில் தண்ணீர்பட்டு, என் பெயர் அழிந்துவிட்டால், என்ன செய்வேன்? ஆடிக்கொண்டிருக்கும் என் பல், வகுப்பு நேரத்தில் விழுந்துவிட்டால், என்ன செய்வேன்? கொட்டும் இரத்தத்தை யார் துடைப்பார்கள்?"

சிறுவன் டொனால்டின் இந்தக் கவலைப்பட்டியலை வாசிக்கும்போது, வயதில் வளர்ந்துவிட்ட நமக்குள், இலேசான கேலிச்சிரிப்பு தோன்றுகிறது... பாவம் டொனால்டு என்ற பரிதாபமும் எழுகிறது... இல்லையா? மனதைத் தொட்டுச்சொல்வோம். எத்தனை முறை நாம், சிறுவன் டொனால்டாக மாறியிருக்கிறோம், இன்றும் மாறிவருகிறோம்? பெரிதும், சிறிதுமாக, எத்தனை கவலைகள் நம் தூக்கத்தை துரத்தியடித்துள்ளன?

அமெரிக்க ஐக்கிய நாட்டில் பணியாற்றும் Thomas Borkovec என்ற பேராசிரியர், கவலைகளைப்பற்றி ஆய்வுகளை மேற்கொண்டவர். எந்தக் கவலை, பெரும்பாலான மனிதர்களை ஆட்டிப்படைக்கிறது என்பதை அறிய அவர் மேற்கொண்ட ஆய்வு, நமக்கு ஆச்சரியம் தரும் ஒரு முடிவை வழங்கியுள்ளது. போர்கள் பற்றிய அச்சம், பொருளாதாரச் சிக்கல்கள், இயற்கைச் சூழலின் சீரழிவு, தொற்றுநோய்கள், மணமுறிவு போன்ற காரணங்கள், பெரும்பாலான மனிதர்களை, பெரும் கவலைக்குள்ளாக்குவது கிடையாது என்பதை, பேராசிரியர் Borkovec அவர்கள், கண்டுபிடித்துள்ளார். நம்மில் பலரை அலைக்கழிக்கும் ஒரு பெரும் கவலை: அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற கவலை. "இது நடந்தால், அவர்கள் என்ன நினைப்பார்கள், என்ன சொல்வார்கள், அவர்கள் நம்மைப் பார்த்து சிரிப்பார்களே!" என்ற எண்ணங்களே, பெரும்பாலானவர்கள் தன்னிடம் பகிர்ந்துகொண்ட கவலைகள் என்று, பேராசிரியர் Borkovec அவர்கள் கூறியுள்ளார்.

அடுத்தவரை மையப்படுத்தி, கவலைகளில் மூழ்கிப் போவதற்குப் பதில், ஆண்டவனை மையப்படுத்தி, நம் கவலைகளிலிருந்து வெளியேறுமாறு இயேசு அழைப்பு விடுக்கிறார். கவலைகளுக்குப் பதில், கடவுள் நம்பிக்கையால் மனதை நிரப்புவதே, கவலைகளிலிருந்து வெளியேறும் சிறந்த வழி என்று இயேசு சொல்லித் தருகிறார். கவலைப்படுவதால் உங்களில் எவர் தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்டமுடியும்? என்று அவர் நமக்கு முன் வைக்கும் ஓர் எதார்த்தமான சவால், நம்மை விழித்தெழச் செய்கிறது. கவலைப்படுவதால், ஒருவேளை, நாம் குறுகிப் போக, உடல்நலம் குறைந்துபோக அதிக வாய்ப்புக்கள் உண்டு.

முன்னேற்றத்தில் வளர்ந்துள்ளதாக முரசுகொட்டும் முதல்தர நாடுகளில், தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கையும் வளர்ந்துள்ளது என்பது நமக்குத் தெரியும். தற்கொலைக்கு அடுத்தபடியாக, கவலைகளால் உருவாகும் வயிற்றுப்புண், இரத்த அழுத்தம், இதயக் கோளாறு ஆகியவற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகம் என்று சொல்கின்றன, இன்றையப் புள்ளிவிவரங்கள். கவலைப்படுவதால், உடல் உயரத்தைக் கூட்டமுடியாது, உடல் நலத்தையும் கூட்டமுடியாது.

செல்வம் சேர்க்காதீர்கள், கவலைப்படாதீர்கள் என்று இயேசு சொல்லவில்லை. காசையும், கவலைகளையும் கடவுளுக்கு இணையாகவோ, கடவுளாகவோ மாற்றவேண்டாம்; அவற்றிற்குக் கோவில் கட்டவோ, அவற்றிற்கு அடிமைகளாய் பணிவிடை செய்யவோ வேண்டாம் என்பதே, இயேசு ஆணித்தரமாகக் கூறும் ஆலோசனைகள்.

இயேசு, இன்று, நற்செய்தியின் இறுதியில் கூறும் வார்த்தைகள், நம் மனதில் ஆழமாய் பதியவேண்டும். வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய, மிகவும் எளிதான அறிவுரை இது: நாளைக்காகக் கவலைப்படாதீர்கள்... ஏனெனில் நாளையக் கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும. அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்.

அமெரிக்க ஐக்கிய நாட்டில், Marijohn Wilkin, Kris Kristofferson என்ற இருவரும் உருவாக்கிய “One Day At A Time” அதாவது, “ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு நாளாக...” என்ற புகழ்பெற்ற பாடல், பல்லாயிரம் மக்களின் மனங்களிலிருந்து எழும் வேண்டுதலாக, ஒவ்வொரு நாளும் விண்ணைநோக்கிச் செல்கிறது. வாழ்வை, ஒவ்வொரு நாளாக எதிர்கொள்ளும் பக்குவத்தை நாம் பெறவேண்டும் என்ற உணர்வுடன், பல்லாயிரம் உள்ளங்களுடன் நாமும் இச்செபத்தில் இணைவோம்:

நான் ஒரு சாதாரண மனிதப்பிறவி.

இறைவா, நான் யார் என்பதையும்,

யாராக இருக்கமுடியும் என்பதையும், நம்புவதற்கு உதவும்.

இறைவா, நான் ஏறிச்செல்ல வேண்டிய படிக்கற்களைக் காட்டும்.

நேற்று என்பது போய்விட்டது, நாளை என்பது வராமலேயே போகலாம்...

எனவே, இன்று மட்டும் எனக்கு உதவி செய்யும்...

வாழ்வை, ஒவ்வொரு முறையும்,

ஒவ்வொரு நாளாக எடுத்துக்கொள்ள

இறைவா, எனக்குச் சொல்லித்தாரும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.