2017-02-27 16:44:00

என்றென்றும் நம்முடன் வரும் நல்ல நண்பர், தந்தை இறைவன்


பிப்.,27,2017. உலகப்பொருட்களின் மாயைக்கு உள்ளாகி, அநாதைகளாக உணரும் இக்கால மக்கள், இறைவனே நம் தந்தை என்பதை மீண்டும் கண்டுணர வேண்டும் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நம்மை விட்டு வெகுதூரத்திலிருப்பவரோ, நமக்குத் தெரியாதவரோ அல்ல இறைவன், மாறாக, அவரே நம் அடைக்கலம், மற்றும், நம் அமைதியின் ஆதாரம் என தன் ஞாயிறு மூவேளை செப உரையின்போது தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுள் என்றென்றும் நம்முடன் வரும் நல்ல நண்பர், தந்தை என்பதை நாம் எல்லா நேரத்திலும் உணர்ந்து ஏற்பதில்லை எனவும் தெரிவித்தார்.

உடனடித் தேவைகள் பக்கமே எப்போதும் சாய்ந்து நிற்கும் மனிதகுலம், இறைத் தந்தையின் அன்பெனும் உன்னதத்தைக் குறித்து மறந்துவிடுவதும், சிலவேளைகளில் மறுத்து விடுவதும் இடம்பெறுகிறது என்ற திருத்தந்தை, அநாதைகளாக நாம் உணரும் இன்றைய சூழல்களில், இறைத்தந்தையின் பாச அனுபவத்தை உணர்வது இன்றியமையாதது என்றார்.

உலகின் படைப்புக்கெல்லாம் உணவூட்டும் இறைவன் இருக்கையில், நாளை என்பதைக் குறித்து நாம் கவலைப்பட வேண்டாம் என்று இயேசு எடுத்துரைக்கும் இஞ்ஞாயிறின் நற்செய்தி வாசகம் குறித்து தன் மூவேளை செப உரையில் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளில் நாம் கொண்டிருக்கும் நம் நம்பிக்கைககள் நம்மை ஒருநாளும் கைவிடாது, ஏனெனில், நம்முடன் இணைந்து வரும் நம்பிக்கைக்குரிய நண்பர், இறைவன் என உரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.