2017-02-27 15:24:00

வாரம் ஓர் அலசல் – சாமான்யரின் வலியை யார் உணர்வார்?


பிப்.27,2017. புலனாய்வு நிறுவனம் ஒன்றில், வேலைக்கு ஆள் தேர்வு நடந்தது. மூன்று பேர் சென்றார்கள். முதல் ஆளிடம் கேள்வி கேட்ட அதிகாரி, ஒரு புகைப்படத்தைக் காட்டினார். பக்கவாட்டில் எடுக்கப்பட்ட படம் அது. "இது ஒரு பயங்கர குற்றவாளியோட புகைப்படம். இவனை ஞாபகம் வச்சுக்க, எதை நீ அடையாளமா எடுத்துக்குவ?' என்று அதிகாரி கேட்டார். அதற்கு முதல் ஆள், மிக எளிது சார். இவனுக்கு ஒரு கண்தான் இருக்கிறது என்றான். அதிகாரிக்கு சரியான கோபம் வந்தது. யோவ், பக்கவாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் ஒரு கண்தான் தெரியும். இதுகூடத் தெரியாத முட்டாளா இருக்கியே' என்று விரட்டிவிட்டார் அதிகாரி. இரண்டாவதாக வந்த ஆளிடமும் அதே புகைப்படத்தைக் காட்டி, அதே கேள்வியைக் கேட்டார். அந்த நபரும், ரொம்ப சுலபம் சார். இவனுக்கு ஒரு காதுதான் இருக்கு' என்றான். அதிகாரி நொந்து நூலாகி இரண்டாவது ஆளையும் அனுப்பி விட்டார் அதிகாரி. சலிப்புடன் மூன்றாவது ஆளிடம், அந்த புகைப்படத்தைக் காட்டி கேள்வி கேட்டார். படத்தை உற்றுப் பார்த்த மூன்றாம் ஆள், 'இவன் கான்டாக்ட் லென்ஸ் போட்டிருக்கான் சார்' என்றான். அதிகாரிக்கு வியப்பு. அந்தக் குற்றவாளியின் விபரங்களை எடுத்து வாசித்தார். என்ன அதிசயம். அவன் கான்டாக்ட் லென்ஸ் போடுபவன்தான்.  பிரமாதம்... எப்படி கண்டுபிடிச்சே? சார், இவனுக்கு ஒரு கண், ஒரு காதுதான் இருக்கு. கண்ணாடி போட முடியாதே!' என்றான். அன்பு இதயங்களே, இந்த மூன்றாவது ஆளை அறிவாளி எனச் சொல்ல முடியுமா? எல்லாவற்றுக்கும் சரியான விடை சொல்பவர்களை 'அறிவாளிகள்' என்று சொல்லிவிட முடியுமா? இந்நாள்களில் உலக அரங்கில், சில முக்கிய புள்ளிகள், ஏதோ தாங்கள் சொல்வதுதான் சரி என்பது போன்று அப்பாவிகளைப் பாதிக்கும் அறிக்கைகளை வெளியிட்டு, அவற்றுக்கு நியாயமும் சொல்கின்றனர். அவர்களின் நியாயத்திற்கு, ஒரு கூட்டமும் ஜால்ரா போட்டுக்கொண்டிருக்கின்றது.

அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் டொனால்டு டிரம்ப் அவர்கள், தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பும், பின்பும் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகிறார். குடியேற்றதாரர் குறித்து அவர் வெளியிட்ட அரசாணை பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில், “ஊடகங்கள், அமெரிக்க மக்களின் எதிரி” என்று, கடந்த வாரத்தில், தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ஜெர்மனியில், 2016ம் ஆண்டில், குடியேற்றதாரர் மீதும், அவர்களுக்கு அடைக்கலம் அளிக்கும் இடங்கள் மீதும் 3,533 தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இவை, ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய பத்து தாக்குதல்கள் வீதம் நடத்தப்பட்டுள்ளன. இவற்றில், 43 சிறார் உட்பட 560 பேர் காயமடைந்துள்ளனர் என, ஜெர்மனியின் உள்துறை அமைச்சகம் இஞ்ஞாயிறன்று செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. ஜெர்மனியின் Chancellor, Angela Merkel அவர்கள், ஆயுதமோதல்கள் மற்றும், அடக்குமுறைக்கு அஞ்சிவரும் மக்களுக்கு தஞ்சம் அளிக்கத் தீர்மானித்து, புலம்பெயர்ந்து வந்தவர்களை வரவேற்றார். ஆனால், இம்மக்கள் மீது வன்முறை தாக்குதலை நடத்தும் ஒரு கூட்டம், தங்களின் நடவடிக்கைகளுக்கு நியாயமும் சொல்கின்றது.

இலங்கையில் உள்நாட்டுப்போரின்போது, இராணுவத்தால் ஆக்ரமிக்கப்பட்ட தங்களின் நிலப்பகுதிகளைத் திருப்பித் தர வேண்டுமென்று, அந்நாட்டின் தமிழர் பகுதிகளில், தொடர் உண்ணாவிரதப் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்தியாவில்,  மத்திய அரசு, தமிழகத்தில் செயல்படுத்த அனுமதியளித்துள்ள ஹைட்ரோ கார்பன் திட்டம், அதாவது மீத்தேன் எரிவாயு திட்டத்திற்கு எதிராக, நெடுவாசலிலும், மற்ற இடங்களிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் கலந்துகொள்வதற்குச் செல்லும் மக்கள், காவல்துறையால் வழியிலே தடுத்து நிறுத்தப்படுகின்றனர் என்ற செய்தியும் இத்திங்களன்று வெளியாகியுள்ளது. துர்க்மெனிஸ்தான் நாட்டில், நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர், ஆபத்து தெரியாமல் தோண்டப்பட்ட மீத்தேன் கிணறை, இன்றும், அணைக்க முடியாமல் அந்நாட்டு அரசு திண்டாடுகிறது. தீப்பிழம்பாய்த் தெரியும் இக்கிணறை புகைப்படங்களில் பார்க்கும்போதே நம் நெஞ்சம் பதறுகின்றது. இதே போன்ற திட்டம், ஏற்கனவே பல நாடுகளை காவு வாங்கியுள்ளது. மேலும், இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் அழிந்து போன பசுமையான நிலத்தில், தற்போது சாம்பல்நிற மண் பூகம்பம்போல் பொங்கி வெடித்துக்கொண்டு இருக்கின்றது. அதோடு தீப்பிழம்புகளும் வெளிவருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதியில், மீத்தேன் கிணறுகள் தோண்டப்பட்டால் அவற்றின் ஆபத்து எப்படி இருக்கும்? அடுத்தடுத்து நாசகர திட்டங்கள் நிறைவேற்றப்படுவதற்கு தமிழகம் என்ன பலியாடா? மழையின்றி, முளைத்த பயிர்கள் ஏற்கனவே கருகிப்போய், குடிதண்ணீருக்கே அல்லாடும் மக்களுக்கு, இப்போது ஹைட்ரோ கார்பன் என்ற அரக்கனின் அச்சுறுத்தல்! இந்நிலையில், இத்திங்கள் காலை வாட்சப்பில் ஒரு நண்பர் பகிர்ந்துகொண்டுள்ள செய்தியை நேயர்களே, உங்களோடு பகிர்ந்துகொள்கின்றோம்.

நான் மகாராஷ்டிரா மாநிலம், அகமத் நகரில் இருந்து இரயிலில் பயணம் செய்துகொண்டு இருந்தேன். அச்சமயத்தில், வெப்பநிலை 41 டிகிரி அளவில் இருந்தது. வறண்ட சூடான காற்று என் மூக்கையும் நுரையீரலையும் பதம் பார்த்தது. நான் செல்லவேண்டிய இடத்தை அடைய, இன்னும் நான்கு மணி நேரம் இருந்தது. என்னதான் என் கையில் இருந்த, சூடான அரை பாட்டில் தண்ணீரைக் கொஞ்சம் எடுத்து உறிஞ்சினாலும், தாகம் மேலும் வாட்டியது. சாதாரணமாக குளிர் தண்ணீர் பாட்டில் விற்கும் விற்பனையாளர்களையும் காணவில்லை. ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தேன். இருபுறமும், பார்த்த இடமெல்லாம் காய்ந்த, வறண்ட நிலங்கள்தான். திடீரென்று வலுவான குலுக்கலோடு சேர்ந்து, மக்கள் கத்தும் சத்தமும் கேட்டது. இரயில் மெதுவாக வேகம் குறைவடைய ஆரம்பித்து நின்றது. கோடை காலம் என்பதால் இரயிலிலும் அதிகமான பயணிகளும் இல்லை. முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கொண்ட கும்பல், எங்கள் இரயிலை நோக்கி ஓடி வருவதை என்னால் காண முடிந்தது. ஒவ்வொருவர் கையிலும் காலியான வாளிகள், குடங்கள் மற்றும் பாட்டில்கள் இருந்தன. முதியவர்களும் குழந்தைகளும் ஒவ்வொரு பெட்டியிலும் ஏறி, ஒவ்வொரு இருக்கையின் கீழும் கொஞ்சம் தண்ணீர் உள்ள பாட்டில்களைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். பெண்கள் தங்கள் கைகளில் இருந்த வாளிகளுடன், வேகமாக பெட்டிகளில் ஏறி கழிப்பறைகளுக்குச் சென்று, கழிப்பறை தண்ணீரை வாளிகளில் பிடிக்கத் தொடங்கினர். குளியல் மற்றும் சலவை என்பது, அவர்களுக்கு ஒரு கனவே. ஒரு வயதான மனிதர் என்னைத் தோளில் தொட்டு, என் பாட்டிலில் உள்ள தண்ணீரை நான் குடிக்கப் போகிறேனா அல்லது தூக்கி எறியப் போகிறேனா என்று கேட்டார். அவரிடம் பாட்டிலைக் கொடுத்தேன். மெதுவாக தண்ணீரைக் குடித்துவிட்டு, என் தலைமேல் தன் கையை வைத்து, என்னை ஆசீர்வதித்து, கும்பலில் அந்த முதியவர் காணாமல் போனார். ஒரு தாயின் கரங்களில் ஒரு பச்சிளம் பெண் குழந்தையும் இருந்தது. அவர் ஒரு ஏக்கத்தோடு என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். அவர் தாகத்தோடு இருப்பதை அவர் கண்கள் எனக்கு காட்டிக் கொடுத்தன. நான், என்னுடைய இடத்திற்குச் சென்று என் பையில், திறக்கப்படாமலேயே இருந்த ஒரு முழு பாட்டிலை எடுத்து குடிக்கக் கொடுத்தேன். அதை அவர் வாங்கிய விதம், உலகின் மிக விலையுயர்ந்த ஒரு பொக்கிஷத்தை அவர் வாங்குவது போல இருந்தது. திடீரென பயணச்சீட்டுப் பரிசோதகர்கள் மற்றும் இரயில்வே காவல்துறையினர் கழிப்பறையை நோக்கி ஓடி வருவதைப் பார்த்தேன். மீதமுள்ள மக்கள் குதித்து ஓடத் தொடங்கினர். ஒருதுளி  நீர்கூட தளும்பாத அளவுக்கு, அவர்கள், தங்களுடைய வாளிகள் மற்றும் பாட்டில்களில் நீரை நிரப்பி இருந்ததை காண முடிந்தது. இவர்கள் பற்றிச் சொன்ன பயணச்சீட்டுப் பரிசோதகர் ஒருவர், இவர்கள் திருடும் நீரை, குடிக்கவும் சமைக்கவுமே பயன்படுத்துகின்றனர். இந்தச் செயல், இவர்கள் உயிருடன் இருக்கத்தான் என்பதால் இது, இவர்களைத் தண்டிக்கும் அளவிற்கு, மிகப்பெரிய குற்றம் இல்லை என்று நினைக்கிறேன். இயற்கை அவர்களிடம் உண்மையில் கடுமையாக இருக்கிறது என விவரித்தார். அரசின் தொழில்துறை ஒதுக்கீட்டில், நீர், மதுபான நிறுவனங்களுக்கு விற்கப்படுகிறது. ஒரு லிட்டர் பீர் பானம் தயாரிக்க, ஏறக்குறைய இருபது லிட்டர் நீர் தேவைப்படுகிறது. பீர் பானம் இல்லாமல் உயிர் வாழ முடியும். ஆனால் தண்ணீரின்றி வாழ முடியுமா? தமிழகத்தில் மூன்றில் ஒரு பங்கு விளைச்சல் தருபவை காவிரி டெல்டா பகுதிகள். இந்த நிலத்தில், மீத்தேன் திட்டத்தில், ஆறாயிரம் அடி ஆழத்துக்கு, இரண்டாயிரம் குழிகள் தோண்டப்படவுள்ளன. உயிர் ஆதாரமான நிலத்தடி நீரை வெளியேற்றி, வேதியக் கலவையை உள்ளே செலுத்தி பாறைகளைப் பிளந்து, மீத்தேன் வாயு எடுக்கப்படவிருக்கிறது. வேதியக் கழிவுகள் நிலத்தில் கொட்டப்பட இருக்கின்றன. இந்த வேதியப்பொருள்கள் கதிர்வீச்சுத் தன்மை கொண்டவை. ஒரு குழியிலிருந்து மீத்தேன் எடுக்க, நான்கு டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படுகிறது. இதை வைத்து, நாற்பது இலட்சம் மக்களுக்கு, ஓர் ஆண்டு முழுவதும், தினமும் ஐந்து குடம் தண்ணீர் வழங்கலாம். இந்த அளவு தண்ணீர், காவிரியிலிருந்து மட்டுமல்லாமல் தமிழகத்தின் எல்லா நதிகளிலிருந்தும் எடுக்கப்படும். இப்படி இரண்டாயிரம் குழிகளுக்கு நாற்பது ஆண்டுகளில் எவ்வளவு தண்ணீர் தேவை என்று எண்ணிப் பார்ப்போம். ஒவ்வொரு துளிநீரும் பாதுகாக்கப்பட வேண்டியதே! இதற்கு நம் பங்கு என்ன? சாமான்ய மக்களின் அன்றாட வலியை யார் உணர்வார்? மீத்தேனிலிருந்து மீட்டெடுப்போம், தமிழகத்தை ஒன்றிணைந்து!  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.