2017-02-28 16:19:00

தென் சூடானுக்கு பயணம் மேற்கொள்வது குறித்து திருத்தந்தை...


பிப்.28,2017. உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டுள்ள தென் சூடான் நாட்டிற்குச் சென்று, அம்மக்களைச் சந்திப்பதற்குச் சிந்தித்து வருவதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

உரோம் நகரில், ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபையின் பங்குத்தளம் ஆரம்பிக்கப்பட்டதன் 200ம் ஆண்டையொட்டி, அச்சபையின் அனைத்துப் புனிதர்கள் ஆலயத்திற்கு இஞ்ஞாயிறன்று சென்ற திருத்தந்தையிடம், அப்பங்கு மக்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தபோது, கான்டர்பரி ஆங்கிலிக்கன் பேராயர் ஜஸ்டின் வெல்பி அவர்களுடன் தென் சூடான் செல்வது பற்றி பரிசீலித்து வருவதாகத் தெரிவித்தார்.

தென் சூடானின் கத்தோலிக்க, ஆங்கிலிக்கன் மற்றும், பிரெஸ்பிட்டேரியன் கிறிஸ்தவ சபை ஆயர்கள் விரும்பிக் கேட்டுக்கொண்டதன்பேரில், இப்பயணம் குறித்து, வத்திக்கான் அதிகாரிகளும், தானும் பரிசீலித்து வருவதாக, மேலும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இதற்கிடையே, தென் சூடானில், கிறிஸ்தவர்கள் அல்லாதவர் உட்பட அனைத்து மக்களுக்கும், திருத்தந்தையின் வருகை குறித்த செய்தி மிகவும் மகிழ்வை அளிக்கும், ஆயினும், இவ்வருகை குறித்து, திருத்தந்தை உறுதியுடன் தங்களிடம் கூறவில்லையென, தென் சூடான் ஆயர் லுடு தோம்பே அவர்கள் கூறினார்.

திருத்தந்தையின் வருகை, தென் சூடான் மக்களின் விசுவாசத்திற்கும், வாழ்வுக்கும் முழு அர்த்தத்தைக் கொடுக்கும் எனவும் கூறினார், ஆயர் தோம்பே.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.