2017-03-01 15:56:00

திருத்தந்தைக்கு நிபந்தனையற்ற மரியாதையும், கீழ்ப்படிதலும்


மார்ச்,01,2017. "கர்தினால்களாகிய உங்களில் ஒருவர், வருங்காலத் திருத்தந்தையாக இருப்பார். அவருக்கு, இன்று முதல், என் நிபந்தனையற்ற மரியாதையையும், கீழ்ப்படிதலையும், நான் வாக்களிக்கிறேன்" என்று, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், நான்கு ஆண்டுகளுக்கு முன், பிப்ரவரி 28ம் தேதி கூறிய சொற்களை, Zenit கத்தோலிக்க செய்தி, நினைவு கூர்ந்தது.

2013ம் ஆண்டு, பிப்ரவரி 11ம் தேதி, லூர்து நகர் அன்னை மரியாவின் திருநாளன்று, வத்திக்கானில் கூடியிருந்த கர்தினால்களின் சிறப்புக் கூட்டத்தில், அப்போதைய திருஅவைத் தலைவராக இருந்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், தான் தலைமைப் பொறுப்பை துறப்பதாகத் தெரிவித்தார்.

இரண்டு வாரங்களுக்குப் பின், பிப்ரவரி 28ம் தேதி, அவர் வத்திக்கானிலிருந்து புறப்பட்ட நேரத்தில், கர்தினால்களை இறுதியில் சந்தித்தபோது, தான் அவர்களோடு பயணித்த 8 ஆண்டுகளுக்காக இறைவனுக்கு நன்றிகூறியதோடு, கர்தினால்களின் அவை, ஓர் இசைக்குழுவைப் போல் ஒன்றிணைந்து செயலாற்றினால், இனிய இசை உருவாகும் என்பதையும் எடுத்துரைத்தார், திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

"திருஅவை, ஏட்டளவு கருத்துக்களால் நிரப்பப்பட்ட ஒரு நிறுவனம் அல்ல, மாறாக, அது, தான் வாழும் காலத்திற்குத் தகுந்ததுபோல் வளர்ந்துவரும் ஓர் உயிர்" என்று இறையடியாரான அருள்பணி ரொமானோ குவார்தீனி (Romano Guardini) அவர்கள் கூறிய சொற்களை, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், கர்தினால்களுடன் மேற்கொண்ட தன் இறுதிச் சந்திப்பில் நினைவுகூர்ந்தார்.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.