2017-03-02 15:46:00

ஜார்க்கண்டில் வரதட்சணையை திருப்பிக்கொடுத்த குடும்பத்தினர்


மார்ச்,02,2017. இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் வரதட்சணைக்கு எதிராக அமைதியான புதுமையான முறையில் நடைபெற்று வரும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, சுமார் 800 முஸ்லிம் குடும்பத்தினர், வரதட்சணையை திருப்பிக் கொடுத்துள்ளனர்.

இந்தியாவில் வரதட்சணையால் ஆயிரக்கணக்கான ஏழைக்குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தின் இலடேகர் மாவட்டம், பொகாரி கிராமத்தைச் சேர்ந்த ஹாஜி மும்தாஜ் அலி அவர்கள், வரதட்சணைக்கு எதிராக ஒரு பிரச்சாரத்தை, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி, தனது மகனின் திருமணத்துக்கு வரதட்சணையாக பெற்ற தொகையை, திருப்பிக் கொடுத்தார்.

இவரைப் பின்பற்றி, முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த பலரும், வரதட்சணைக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஓராண்டில், இலடேகர் மற்றும் பலாமு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 800 குடும்பத்தினர், திருமணத்துக்கு வரதட்சணையாக பெற்ற ரூபாய் 6 கோடிக்கும் மேற்பட்ட தொகையை, மணமகளின் குடும்பத்தினருக்கு திருப்பிக் கொடுத்துள்ளனர். அத்துடன், இப்போது நடைபெறும் திருமணங்களின்போது, மணமகன் வீட்டார், வரதட்சணையை மறுத்து வருகின்றனர்.

இதுகுறித்து மும்தாஜ் அலி அவர்கள் கூறும்போது, “வரதட்சணை, ஏழை குடும்பத்தினரை, புற்றுநோய் போல அரித்து வருகிறது. இதற்கு எதிராக தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறோம். இதற்கு பலன் கிடைத்து வருகிறது. எனினும், மேலும் சிலர் வரதட்சணை பெற்று வருகின்றனர். இதை முழுவதுமாக ஒழிக்கும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும்” என்று கூறினார். 

ஆதாரம் : தி இந்து / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.