2017-03-03 15:38:00

இந்தோனேசியா : ஒவ்வோர் ஆண்டும் 3,40,000 சிறார் திருமணங்கள்


மார்ச்,03,2017. இந்தோனேசியாவில் சிறார் திருமணங்களை ஒழிப்பது குறித்து, அந்நாட்டு அரசு மிகவும் அக்கறை காட்ட வேண்டுமென, சிறார்க்கெதிரான வன்முறை ஒழிப்பு குறித்த ஐ.நா.வின் சிறப்புத் தூதர் Marta Santos Pais அவர்கள், இந்தோனேசிய அரசை வலியுறுத்தியுள்ளார்.

இந்தோனேசிய அரசுத்தலைவர் Joko Widodo அவர்களை அண்மையில் சந்தித்த Pais அவர்கள், இந்தோனேசியாவில் 25 விழுக்காட்டுச் சிறுமிகள், 18 வயதை எட்டும் முன்னரே திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர் என்று தெரிவித்தார்.

இச்சிறுமிகள் கர்ப்பம் தரிக்கும்போது, அவர்களின் உடல்நலத்திற்கு ஆபத்து ஏற்பட்டு அவர்கள் மரணத்தையும் எதிர்நோக்க நேரிடும் என்றும், எச்சரித்தார் ஐ.நா. அதிகாரி Pais.

இந்தோனேசிய புள்ளிவிபர நிறுவனத்தின்படி, அந்நாட்டில், ஒவ்வோர் ஆண்டும், 15 மற்றும், 18 வயதுக்கு உட்பட்ட ஏறக்குறைய 3 இலட்சத்து 40 ஆயிரம் சிறுமிகள் திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர் எனத் தெரிகிறது.

இந்தோனேசியாவின் ஆயர் பேரவையின் குடும்பநல பணிக்குழுவின் செயலராகிய அருள்பணி Hibertus Hartana அவர்களும், அந்நாட்டின் திருமணம் சார்ந்த சட்டத்தை, குறிப்பாக, வயது வரம்பு குறித்து, மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். 

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.