2017-03-03 16:12:00

உலக வெப்பநிலை உயர்வுக்கு செல்வந்தர்கள் பொறுப்பு


மார்ச்,03,2017. உலகளாவிய வெப்பநிலை உயர்வுக்கும், உயிரினங்களின் அழிவுக்கும், பணக்காரர்களே முதல் காரணம் என்று, வத்திக்கான் கருத்தரங்கு ஒன்றில் கூறப்பட்டது.

“உயிரினங்களின் அழிவு : இயற்கை உலகை எவ்வாறு காப்பாற்றுவது?” என்ற தலைப்பில், திருப்பீட அறிவியல் கழகமும், திருப்பீட சமூக அறிவியல் கழகமும் இணைந்து வத்திக்கானில் நடத்திய மூன்று நாள் கருத்தரங்கின் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தற்போது உலகிலுள்ள உயிரினங்களில் நான்கில் ஒரு பகுதி, அழியக்கூடிய ஆபத்தில் உள்ளது என்றும், இந்த உயிரினங்களில் ஏறக்குறைய பாதி, இந்த நூற்றாண்டு முடிவதற்குள் அழிந்துவிடக்கூடும் என்றும், அவ்வறிக்கையில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

1950ம் ஆண்டிலிருந்து, உலகின் மக்கள் தொகை மூன்று மடங்காக அதிகரித்து, 740 கோடியை எட்டியிருக்கின்றவேளை, இப்பூமிக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பது மக்கள் தொகை பெருக்கம் அல்ல, ஆனால், மனிதரின் பேராசையே என்றும் அவ்வறிக்கை கூறுகின்றது. 

பல்வேறு உயிரினங்களுக்கு எதிராக அதிகரித்துவரும் அச்சுறுத்தலுக்கும், பூமியின் வளங்கள் கட்டுப்பாடற்றுப் பயன்படுத்தப்படுவதற்கும், குறிப்பிட்ட அளவு மக்கள், வளங்களை அளவுக்கதிகமாக உறிஞ்சுவதும், வளங்கள் சமமாகப் பங்கிடப்படாமல் இருப்பதுவுமே காரணங்கள் என்று, அவ்வறிக்கை குறை கூறியுள்ளது.  

சுற்றுச்சூழலையும், பல்வேறு உயிரினங்களையும் காப்பாற்றுவதற்கு, உலகின் வளங்கள் பகிரப்பட வேண்டும் எனக் கூறும் அவ்வறிக்கை, இலாபத்தை அடிப்படையாக வைத்து ஆற்றப்படும் பொருளாதார நடவடிக்கைகள் அதிகரித்து வருவதும், மரங்கள்  எரிபொருள்களாகப் பயன்படுத்தப்படுவதும், சுற்றுச்சூழல் மாசுகேட்டிற்குக் காரணங்கள் என்று குறிப்பிட்டுள்ளது.

பிப்ரவரி 27ம் தேதி முதல், மார்ச் 01ம் தேதி வரை வத்திக்கான் தோட்டத்தில் நடந்த இக்கருத்தரங்கின் அறிக்கை, இவ்வியாழனன்று, செய்தியாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.