2017-03-04 15:21:00

தவக்காலம், நம் உடனடி மனமாற்றத்திற்கு அழைக்கின்றது


மார்ச்,04,2017.  “தவக்காலம், நம் உடனடி மனமாற்றத்திற்கு அழைப்பு விடுக்கின்றது. நம் முழு இதயத்தோடு இறைவனிடம் திரும்பி வருவதற்கு நாம் அழைக்கப்படுகின்றோம்” என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்தியாக, இச்சனிக்கிழமையன்று வெளியிட்டார்.

மேலும், திருப்பீடத்திற்கான ஈராக் புதிய தூதர் Omer Ahmed Karim Berzinji அவர்களை, இச்சனிக்கிழமையன்று, திருப்பீடத்தில் சந்தித்து நம்பிக்கைச் சான்றிதழ்களைப் பெற்றார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இன்னும், திருத்தந்தையும், திருப்பீட துறைகளைச் சார்ந்த உயர் அதிகாரிகள் அனைவரும், உரோம் நகருக்கு ஏறக்குறைய 16 மைல் தூரத்தில் அமைந்துள்ள அரிச்சா நகர், தெய்வீகப் போதகர் இல்லத்தில், மார்ச் 5, இஞ்ஞாயிறு மாலை முதல் தங்களின் ஆண்டு தியானத்தைத் தொடங்கவுள்ளனர்.  

மார்ச் 10, வருகிற வெள்ளிக்கிழமை வரை நடைபெறவிருக்கும் இந்த ஐந்து நாள்கள் தியானம் பற்றி, CNA கத்தோலிக்க ஊடகத்திடம் பேசிய, அருள்பணி Olinto Crespi அவர்கள், இத்தியானம், புனித இஞ்ஞாசியார் தியானம் போன்று அமைந்திருக்கும் என்று தெரிவித்தார். பிரான்சிஸ்கன் சபை அருள்பணியாளர் ஜூலியோ மிக்கேலினி அவர்கள், தியான உரைகளை வழங்குவார்.

தவக்காலத்தில், திருத்தந்தையும், திருப்பீட துறைகளைச் சார்ந்த உயர் அதிகாரிகளும் தியானம் செய்வது, ஏறக்குறைய எண்பது ஆண்டுகளுக்கு முன்னர், திருத்தந்தை 11ம் பயஸ் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. வத்திக்கானில் தியானங்கள் நடைபெற்றபோது, தியான உரைகள் முடிந்ததும், திருப்பீட அதிகாரிகள் தங்கள் தங்கள் அலுவலகங்களுக்குச் சென்று பணியாற்றினர்.

ஆயினும், தியானம், சிந்தனை மற்றும் செபச்சூழலில், நடைபெற வேண்டுமென்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விரும்பியதால், 2014ம் ஆண்டு, தவக்காலத்திலிருந்து உரோம் நகருக்கு வெளியே, தியான இல்லத்தில் நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்தார், அருள்பணி Olinto Crespi.

புனித பவுல் துறவு சபையினர் நடத்தும் தெய்வீகப் போதகர் இல்லத்தில், அச்சபையின் ஐந்து அருள்பணியாளர்கள், இத்தியான காலத்தில் திருத்தந்தைக்கும், திருப்பீட உயர் அதிகாரிகளுக்கும் உதவவுள்ளனர்.

ஆதாரம் : CNA / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.