2017-03-06 15:07:00

வாரம் ஓர் அலசல் – அன்பென்ற வெளிச்சத்தை அனுமதித்தால்...


மார்ச்,06,2017. ஆப்ரிக்காவில் நீளமான கடற்கரையைக் கொண்டிருக்கும் நாடு சொமாலியா. இந்த கிழக்கு ஆப்ரிக்க நாடு, உள்நாட்டுப் போரால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வேளையில், இந்நாட்டில், தற்போது வறட்சியும், பஞ்சமும், ஊட்டச்சத்துப் பற்றாக்குறையும் தலைவிரித்தாடுகின்றன. அந்நாட்டின், தென்மேற்கிலுள்ள Bay மாநிலத்தில் மட்டும், 48 மணி நேரங்களில், 110 பேர், பசியால் மடிந்துள்ளனர் என்று, மார்ச்,04, கடந்த சனிக்கிழமையன்று, சொமாலியப் பிரதமர் Hassan Khaire அவர்கள் அறிவித்துள்ளார். ஏறக்குறைய முப்பது இலட்சம் மக்களுக்கு, உணவு தேவைப்படுகின்றது என்று, மனிதாபிமான நிறுவனங்கள் சொல்கின்றன. இந்நாட்டைத் தாக்கிய பஞ்சத்தால், 1992ம் ஆண்டில் ஏறக்குறைய 2 இலட்சத்து 20 ஆயிரம் பேரும், 2010ம் ஆண்டுக்கும், 2012ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், 2 இலட்சத்து 60 ஆயிரம் பேரும் இறந்துள்ளனர். இந்நாட்டில், பஞ்சத்தால் இந்த ஆண்டு 2 இலட்சத்து 70 ஆயிரம் குழந்தைகள் இறப்பதற்கு வாய்ப்பிருப்பதாக யூனிசெஃப் நிறுவனம் கணித்துள்ளது. வறட்சி தவிர, நோய்களும் அந்நாட்டு மக்களைத் தாக்கியுள்ளன. தற்போது உலகில், கடும் பசி மற்றும் வறட்சியை எதிர்கொள்ளும் நான்கு நாடுகளில், சொமாலியாவையும் ஒரு நாடாக அறிவித்துள்ளது ஐக்கிய நாடுகள் நிறுவனம். 

சொமாலியா என்றாலே, அது ஒரு ஏழ்மை நாடு என்பதுதான் நம்மில் பலருக்குத் தெரியும். ஆனால், இந்த நாடு இந்நிலைமைக்கு வருவதற்கு காரணம் என்னவென்பதை ஊடகங்கள் வழியாக அறியும்போது அதிர்ச்சியே மிஞ்சி நிற்கின்றது. முன்னொரு காலத்தில் மிகவும் பசுமை நிறைந்த விவசாய நாடாக இருந்த சொமாலியா, இத்தாலியின் கட்டுப்பாட்டின்கீழ் வந்த பின்னர், அதன் நிலைமையே மாறியது. இத்தாலியோடு கூட்டுச்சேர்ந்த மேற்கத்திய நிறுவனங்கள், சொமாலிய மண்ணின் கனிம வளத்தைக் கொள்ளையடித்தன. மீத்தேன் மற்றும் இதர வேதியப் பொருள்களைத் தோண்டி எடுத்தன. இதனால், சொமாலியாவின் வளமான விவசாய நிலங்கள் எல்லாம் பாழாகி, ஒட்டு மொத்த விவசாயமே அழிந்து விட்டது. அந்த நாட்டை உலக குப்பைத் தொட்டியாக்கி, அணுக்கழிவுகள் மற்றும், மருத்துவக்கழிவுகளைக் கொட்டி, கடல் வளத்தையும் அழித்துவிட்டனர். இதனால், தலைநகர் Mogadishu உட்பட, கடற்கரையோர நகரங்களைச் சார்ந்த செழிப்பான வயல் நிலங்கள் எல்லாம் இன்று காய்ந்து கட்டாந்தரையாக கிடக்கின்றன. சொமாலியாவும், படிப்படியாக தனது அழகை இழந்துவிட்டது. கால்நடை வளர்ப்பிலும், மிகச் செழிப்பாக இருந்த சொமாலியா, அதற்கும் வழியில்லாமல் இப்போது திணறுகிறது. 1960ம் ஆண்டு ஜூலையில் இத்தாலியிடமிருந்து விடுதலை அடைந்தது சொமாலியா.

அன்று, சொமாலிய தலைவர்கள், மேற்குலக ஆதிக்கத்திடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு, அவர்களின் சுரண்டல்களுக்குத் தலையாட்டியதன் விளைவே,  இன்று மொத்த நாடும், வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளதற்குக் காரணம் என ஊடகச் செய்திகள் கூறுகின்றன. அன்றைய சொமாலியத் தலைவர்களின் பண ஆசையினால், நாட்டின் பொருளாதாரத்திற்குப் பெருமளவில் உதவிய விவசாய உற்பத்தி, ஏறக்குறைய நூறு ஆண்டுகளில் சரிந்து வீழ்ந்துள்ளது. பல அண்டை நாடுகளுக்கு உணவு கொடுத்த சொமாலியா, இன்று, ஒருவேளை உணவுக்கு, உலகிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. மிகக் கடுமையான வறட்சி, உள்நாட்டுப் போர், அடக்குமுறை, பெண்களுக்கு எதிரான வன்முறை, என்று எல்லாமே அதிகரித்து, இன்று கைவிடப்பட்ட ஒரு நாடாக அது உள்ளது. சமூகச் சீரழிவுகளைப் படிப்படியாக சந்தித்து, இன்று மிகவும் வருவாய் குறைந்த நாடாக மாறிவிட்டது சொமாலியா. நமது அன்னைத் தமிழகம், இன்னொரு சொமாலியாவாக மாறாமல் இருக்கவும், பாலைவனமாக ஆகாமல் இருக்கவும்,  நெடுவாசலில் போராட்டங்கள் தொடர்கின்றன. எத்தனை பேச்சுவார்த்தைகள் நடந்தாலும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை, இரத்து செய்வதாக, மத்திய அரசு, அறிவித்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று மக்கள் ஒற்றுமையுடன் போராட்டம் நடத்தி வருகின்றனர். உரோமையில் வாழ்கின்ற தமிழர்களும், இஞ்ஞாயிறன்று ஒன்றுகூடி, நெடுவாசல் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றோம். தமிழக மக்களின் இந்தப் போராட்டம் வெற்றி பெறட்டும். அன்பர்களே, சில குறிப்பிட்ட மனிதரின் பணப் பேராசைகள், நாற்காலி வெறிகள், ஒரு சமூகத்தையே எவ்வளவு துன்பத்திற்கு ஆளாக்குகின்றன! அதுவும், பல ஆண்டுகளுக்குப் பின் வாழும் சமூகத்தை எவ்வளவு இன்னல்களுக்கு உள்ளாக்குகின்றன! சொமாலியா நாட்டின் இன்றைய நிலை, நமக்கு ஒரு பாடமாக உள்ளது. நாம் எல்லாரும், பிறர் வாழ வேண்டும் என்ற நற்சிந்தனை வெளிச்சத்தால் மனதை நிரப்பி, பேராசை என்ற இருளை, நம் மனங்களிலிருந்து விரட்டினால், தலைமுறை தலைமுறையாய் அனைவரும் நிம்மதியாய் வாழலாம் அல்லவா?

ஒருவர், தெருவில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மண்பானையிடம் ‘‘கொளுத்தும் வெயிலிலும்கூட நீ மட்டும் எப்படி உள்ளும் புறமும் குளிர்ச்சியாய் இருக்கிறாய்?’’ என்று கேட்டாராம். அதற்கு அந்தப் பானை, ‘‘எனது தொடக்கமும் மண்தான்; முடிவும் மண்தான். எவனொருவன் தனது தொடக்கத்தையும் முடிவையும் உணர்ந்திருக்கிறானோ, அவன் எப்போதும் குளிர்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனுமே இருப்பான்; வெம்மையிலும் வெறுப்பிலும் தகிப்பதில்லை!’’ என்று சொன்னதாம். நமக்கு, முதலும் முடிவும் மட்டுமல்ல, வாழ்வின் நடுப்பக்கத்திலும் நம்மை நாம் அறிய, சில விடயங்கள் உள்ளன என்ற அற்புதமான பாடத்தை, இந்த மண்பானைச் சொல்லித் தருகின்றது.

ஒரு ஜென் துறவியிடம் சில சீடர்கள் இருந்தனர். ஒருநாள் அவர்கள் தங்கள் குருவிடம், மனதில் இருக்கும் தீய எண்ணங்களை எப்படி மாற்றுவது என்று கேட்டனர். அப்போது அந்தத் துறவி, ஒரு மண்பானையைக் கொண்டு வருமாறு கூறினார். கொண்டுவரப்பட்ட மண்பானையை சீடர்களிடம் காட்டி, இதில் என்ன இருக்கின்றது எனக் கேட்டார். இதில் ஒன்றுமில்லை என்றே பலரும் கூறினர். ஆனால் ஒரு சீடர் மட்டும், இதில் காற்று நிரம்பி இருக்கிறது என்று சொன்னார். சரி, இந்தப் பானைக்குள் இருக்கும் காற்றை வெளியே எடுக்க உங்களால் முடியுமா? என்று, சீடர்களிடம் கேட்டார். எல்லாரும் அமைதியாக இருந்தபோது, அந்தச் சீடர் மட்டும், என்னால் முடியும் என்று சொல்லி, அந்தப் பானையைத் முழுவதும் தண்ணீரால் நிரப்பினார். உடனே துறவியும், இதுவே எனது பதில் என்று சொன்னார். சீடர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்போது துறவி, சீடர்களைப் பார்த்து, நம் மனது இந்த மண்பானையைப் போன்றது. உள்ளே இருக்கும் காற்றை எப்படி நம் கண்களால் காண முடியாதோ, அதுபோலவே, நம் மனதிற்குள் இருக்கும் தீமைகள், எவர் கண்களுக்கும் தெரியாது. நம் மனதிற்குள் இருக்கும் தீமைகளை வெளியே கொண்டுவர எளிதான வழி என்னவென்றால், பானையைத் தண்ணீரால் நிரப்பியது போல், நம் மனதை நல்ல நேர்மறை எண்ணங்களால் நிரப்ப வேண்டும். ஆம். வெளிச்சம் உள்ளே போனால் இருட்டு வெளியே வருவது போல், நல்ல எண்ணங்கள் உள்ளே போனால் தீய எண்ணங்கள் தானாக வெளியேறிவிடும்.

நமக்கு அடுத்திருப்பவர்க்கு, நாம் வாழும் சமூகத்திற்கு, தீமை விளைவிக்கும் எண்ணங்கள் நம் இதயத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். எல்லாவிதப் பேராசைகளிலிருந்தும் நாம் தூய்மைப்படுத்தப்பட வேண்டும். மனித வர்த்தகர்களின் பேராசையால், மத்தியத் தரைக்கடல் பகுதியிலும், மற்ற இடங்களிலும், எத்தனையோ ஏழை மக்கள் ஒவ்வொரு நாளும் பலியாகி வருகின்றனர். மியான்மார் நாட்டில் போதுமான சாலை வசதிகள் இல்லாததால், அந்நாட்டு மக்கள் பெரும்பாலும் படகு போக்குவரத்தையே நம்பியுள்ளனர். சில பகுதிகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப படகுகளின் எண்ணிக்கை இல்லாததால், அதிகப் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான பயணிகளை படகோட்டிகள் ஏற்றிச் செல்கின்றனர். இந்நிலையில், நூறு பேர் மட்டுமே பயணிக்கக் கூடிய படகில், 250 பேரை ஏற்றிச் சென்றதால், பாரம் தாங்காமல் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. மனிதரின் பேராசைக்கு இது ஓர் எடுத்துக்காட்டு. வட கொரியா, உலக நாடுகளின் தொடர் அச்சுறுத்தல்களை கண்டுகொள்ளாமல், ஏவுகணை சோதனைகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. அந்நாடு, ஜப்பான் கடலை நோக்கி நான்கு ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளதாக, இத்திங்கள் காலை, செய்திகள் கூறுகின்றன.

தனது பேராசையால் உலகையே அடைய நினைத்த பல பேரரசர்களின் கதைகள் நமக்குத் தெரியும். இரண்டாம் உலகப் போருக்குக் காரணமான ஹிட்லரின் இறுதி வாழ்வு பற்றி உலகமே அறியும். தமிழகத்தின் தற்போதைய நிலவரம் பற்றி குறிப்பிடத் தேவையில்லை. பேராசைகள் பல வடிவங்களில் வெளிப்படுகின்றன. அது எந்த வடிவத்தில் வந்தாலும், பேராசைக்காரருக்கும், மற்றவருக்கும் தீமையே விளையும். இதற்குப் பதிலாக, அன்பை மனதில் ஊற்றெடுக்கச் செய்தால், இயற்கையும், மனிதரும் என, எல்லாருமே நிம்மதியாக வாழலாம். அந்தச் சூழலில், நெடுவாசல் போராட்டங்களோ, எங்கள் சொந்த நிலங்களை எங்களிடம்  கொடுங்கள், காணாமல்போன உறவுகள் பற்றிய விவரங்களைத் தாருங்கள் என்ற போராட்டங்களோ இடம்பெறாது. எனவே, பேராசை என்ற தீய இருளை மனதிலிருந்து அகற்றி, அன்பு என்ற வெளிச்சத்தால் மனங்களை நிரப்புவோம். அன்பு என்பதே தெய்வமானது என்றார் கவியரசு கண்ணதாசன். அன்பே நம் வாழ்வாகட்டும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி          








All the contents on this site are copyrighted ©.