2017-03-08 16:03:00

அருளாளர் ஆஸ்கர் ரொமேரோ பிறப்பின் முதல் நூற்றாண்டு


மார்ச்,08,2017. அருளாளர் ஆஸ்கர் ரொமேரோ அவர்களின் பரிந்துரையால் நிகழ்ந்துள்ள ஒரு புதுமையைக் குறித்த தகவல் தொகுப்பு, வத்திக்கானை அடைந்துள்ளது என்று, Zenit கத்தோலிக்க இதழ் கூறியுள்ளது.

எல் சால்வதோர் நாட்டின் தலைநகர் சான் சால்வதோரில் பேராயராகப் பணியாற்றி, 1980ம் ஆண்டு, திருப்பலியாற்றிய வேளையில் சுட்டுக் கொல்லப்பட்ட பேராயர் ஆஸ்கர் ரொமேரோ அவர்களின் பரிந்துரையால், கருவுற்றிருந்த ஒரு பெண்ணுக்கு, கருப்பையில் ஏற்பட்ட பிரச்சனைகள் தீர்ந்து, தாயும், சேயும், புதுமையான வழியில் உயிர் பிழைத்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

வாழ்வை ஆதரிக்கும் திருப்பீட அவையின் தலைவரும், பேராயர் ரொமேரோ அவர்களை அருளாளராக உயர்த்தும் முயற்சிகளை முன்னின்று நடத்திய பேராயர் வின்சென்சோ பாலியா அவர்கள், இந்தப் புதுமை குறித்த விவரங்கள், புனிதர் பட்ட வழிமுறைகளை மேற்கொள்ளும் பேராயத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று Avvenire என்ற இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

2015ம் ஆண்டு, மேமாதம் 23ம் தேதி அருளாளராக உயர்த்தப்பட்ட பேராயர் ரொமேரோ அவர்கள், 1917ம் ஆண்டு பிறந்தார் என்பதும், இவ்வாண்டு அவரது பிறந்த ஆண்டின் முதல் நூற்றாண்டு என்பதும் குறிப்பிடத்தக்கன.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.