2017-03-08 15:52:00

லெபனானில் ஊடுருவியுள்ள ஊழல், ஒரு சமுதாயத் தொழுநோய்


மார்ச்,08,2017. லெபனான் நாட்டின் பல்வேறு நிலைகளில் ஊடுருவியுள்ள ஊழல், ஒரு சமுதாயத் தொழுநோய் என்று, மாரனைட் வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, கர்தினால் பெக்காரா பூத்ரோஸ் ராய் (Bechara Boutros Rai) அவர்கள் கூறியுள்ளார்.

தொழுநோயாளர் ஒருவரை இயேசு குணமாக்கிய நிகழ்வை மையப்படுத்தி மறையுரை வழங்கிய கர்தினால் பூத்ரோஸ் ராய் அவர்கள், அரசின் பல்வேறு நிலைகளில் பரவியிருக்கும் ஊழல், பொதுச் சொத்துக்களையும், பொது நிதிகளையும் வீணாக்குதல் போன்ற வெளிப்படையான குற்றங்கள், லெபனான் சமுதாயத்தைப் பாதிக்கும் தொழுநோய் என்று குறிப்பிட்டார்.

பொது நலன்களை வளர்ப்பது, மக்களின் வசதிகளைப் பெருக்குவது போன்ற அக்கறை ஏதுமின்றி, மக்களின் வரிப்பணத்தைக் கூட்டுவதிலேயே அரசின் கவனம் திரும்பியுள்ளது என்று, கர்தினால் பூத்ரோஸ் ராய் அவர்கள் வருத்தம் தெரிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளாக, மக்களின் மாத ஊதியத்தை அதிகரிக்காமல் இருப்பது, மக்கள் வெளியிடும் பொதுநல கோரிக்கைகளுக்குச் செவிமடுக்காமல் இருப்பது ஆகியவை, சமுதாயத் தொழுநோயின் பல்வேறு அறிகுறிகள் என்று, கர்தினால் பூத்ரோஸ் ராய் அவர்கள், தன் மறையுரையில் வலியுறுத்திக் கூறினார்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.