2017-03-09 15:45:00

இராணுவத்தில் பாலின சமத்துவம்


மார்ச்,09,2017. அரசியல், பொருளாதாரம், சமுதாயம், கலாச்சாரம் என்ற அனைத்துத் தளங்களிலும், ஆண்கள் வகிக்கும் நிலையை, பெண்களும் வகிக்கவேண்டும் என்ற கருத்தை கத்தோலிக்கத் திருஅவை, முழுமையாக ஆதரிக்கிறது என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஐ.நா. அவை கூட்டங்களில் திருப்பீடத்தின் சார்பில் பங்கேற்கும், அருள்பணி Janusz Urbanczyk அவர்கள், பெண்கள் உலக நாளான, மார்ச் 8, இப்புதனன்று, இராணுவத்தில் பாலின சமத்துவம் என்ற தலைப்பில் நடைபெற்ற ஐ.நா. அவை அமர்வு ஒன்றில் இவ்வாறு பேசினார்.

ஆண்-பெண் சமத்துவம் என்பது, இராணுவம் உட்பட அனைத்து தளங்களிலும் வெறும் எண்ணிக்கையாக மட்டும் கருத்தப்படக் கூடாது என்பதைச் சுட்டிக்காட்டிய, அருள்பணி Urbanczyk அவர்கள், பெண்களுக்கே உரிய மாண்பை, அனைத்துத் துறைகளும் உறுதி செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பெண்களுக்கே உரிய உள்ளொளி குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளதை தன் உரையில் எடுத்துரைத்த அருள்பணி Urbanczyk அவர்கள், பெண்களிடம் விளங்கும் ஆன்மீக, மற்றும் நன்னெறி சக்தியைக் குறித்து, திருத்தந்தை பேசியிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

மோதல்கள் எழும் சூழல்களில், பெண்கள் அமைதியைக் கொணரும் பக்குவம் பெற்றுள்ளனர் என்பதை உணர்ந்து, அமைதி பேச்சு வார்த்தைகளில் பெண்களுக்கு தகுந்த இடம் வழங்கப்படவேண்டும் என்று அருள்பணி Urbanczyk அவர்கள், கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.